சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரி பகுதியில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவர்கள் அறை எடுத்து தங்கி வந்த தனியார் குடியிருப்பில், ஆந்திர மாநிலம், செகந்திராபாத் பகுதியைச் சார்ந்த கொண்டா ஸ்ரீநிவாஸ் நிகில் (20) எனும் கல்லூரி மாணவரும் தங்கி பயின்று வந்தார்.
இவர் தனது அறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நண்பர்கள் உதவியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நிகில் மரணமடைந்தார். தாம்பரம் மாநகர காவல்துறையைச் சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கடந்த வாரம் திடீரென கஞ்சா சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் கஞ்சா, கஞ்சா ஆயில், ஹூக்கா உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப் பொருட்கள் மாணவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த மறைமலைநகர் போலீசார், 18 மாணவர்களை கைது செய்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்ற ஜாமீனில் விடுவித்தனர்.
நிகிலின் நண்பர்கள் சிலரும் சிக்கியதாகவும், அதிர்ச்சி அடைந்த கொண்டா ஸ்ரீனிவாஸ் நிகிலின் பெற்றோர் அவரை கண்டித்ததாக போலீசார் கூறுகின்றனர். மறைமலைநகர் போலீசார், கல்லூரி மாணவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:கஞ்சா ஆயில் முதல் போதை சாக்லேட் வரை.. ஒரு மாணவி உள்பட 40 பேரிடம் கிடுக்குப்பிடி விசாரணை!