திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் கடலோர பகுதியில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணுமின் நிலையத்தில் முதல் இரண்டு அணு உலைகளில் மின் உற்பத்தி செய்யப்பட்டுவரும் நிலையில், மேலும் நான்கு அணு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன.
கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம் (Credits - ETV Bharat Tamil Nadu) மேலும், அணு உலைகளில் இருந்து வெப்பநீரை நீரை வெளியேற்றுவதற்கும் கடலுக்குள் இரண்டு இடங்களில் தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இருந்து அணு உலை அமைக்க தேவையான கனரக உதிரி பாகங்களை கடல் மார்க்கமாக கொண்டு வருவதற்காக இப்பகுதியில் சிறிய துறைமுகம் ஒன்று ஏற்கனவே இங்கு செயல்பட்டு வந்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி ரஷ்யாவில் இருந்து நீராவி உற்பத்திக்கலன் கடல் மார்க்கமாக கொண்டு வரும் போது, அணுமின் நிலைய நுழைவுப் பகுதியில் தரைதட்டி பாறையில் சிக்கி நின்று, பின்னர் பல நாள் போராட்டம் மற்றும் மிகுந்த பொருட்செலவில் அது மீட்கப்பட்டது.
இதனால் அணுமின் நிலைய நிர்வாகம் பெரும் நெருக்கடிக்கு உள்ளானதாகவும், மிதவை கப்பல்களை கையாள போதிய வசதிகளை ஏற்படுத்தவில்லை என விமர்சனம் எழுந்ததாகவும் கூறப்பட்டது. இதனிடையே, அப்பகுதியில் மற்றொரு சிறிய துறைமுகம் அமைக்க கூடங்குளம் அணுமின் நிலையம் முடிவு செய்தது.
அதன்படி தற்போது துறைமுகம் அமைப்பதற்காக கடல் பகுதியில் 2 கி.மீ தூரத்திற்கு கற்கள் கொட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடலுக்குள் ராட்சத பாறைகள் போடப்பட்டு சுவர் எழுப்புவதால் ஏற்படும் அழுத்தம் காரணமாக, அருகில் உள்ள இடிந்தகரை மீனவ கிராமம் கடல் அரிப்பால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மீனவர்களின் குற்றச்சாட்டு:இது குறித்து அப்பகுதி மீனவர் நிரஞ்சன் என்பவர் கூறுகையில், "அணு உலையில் இருந்து வெளியேறும் வெப்ப நீரை நேரடியாக கடலில் கலக்காமல் இருக்க அனுமின்வாரியம் சார்பில் இப்பகுதியில் ஒரு பாலம் கட்டப்படுகிறது. இதனால் இப்பகுதியில் கடல் அலைகளின் சீற்றம் அதிகரித்துள்ளது.
இதனால் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்வது கடினமாகி உள்ளது. எங்கள் மீனவ கிராமத்தில் 6 ஆயிரம் குடும்பம் உள்ளது எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். கடந்த மாதம் பலத்த காற்று காரணமாக படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் பலியானார். அணுமின் நிலையத்திற்கு கட்டப்படும் பாலம் போல எங்கள் பகுதியிலும் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.
முன்னதாக, 2004ஆம் ஆண்டு சுனாமியின் போது திருநெல்வேலி மாவட்டத்தில் இடிந்தகரையில் மட்டுமே கடல் நீர் ஊருக்குள் புகுந்த போது, அணுமின் நிலையத்தின் தடுப்பு சுவர் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இப்போது நான்கு தடுப்புச் சுவர்கள் கடலில் கட்டப்பட்டிருப்பதால் மீனவர்களிடையே மேலும் அச்சம் அதிகரித்துள்ளது.
மேலும் ஒரு ஆபத்து:இதனிடையே, கடந்த 57 நாட்களுக்கு மேலாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரண்டாம் அணு உலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, எரிந்த யுரேனியம் எரிகோல்களை மாற்றும்போது வெளியேற்றப்படும் வெப்ப கலந்த நீரால் கடல் பகுதி முழுவதும் வெள்ளை நிறத்தில் நுரை தள்ளிய நிலையில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனால் இந்த பகுதியில் வாழும் நண்டு, இறால், சிறிய வகை மீன்கள் அனைத்துமே இந்த இடத்தை விட்டு இடம்பெயர்ந்து விட்டது என்றும், நெல்லை மாவட்ட மீனவர்களுக்கே அதிக அளவு மீன்வளம் செழிப்பு மிகுந்த கடல் பகுதி தற்பொழுது கூடங்குளம் அணுமின் நிலைய தடுப்புச் சுவருக்குள் சென்று விட்டதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே போர்க்கால அடிப்படையில் இடிந்தகரை கிராமத்தைச் சுற்றி தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். அணுமின் நிலைய பகுதியில் வெப்பநீர் கலக்கும் இடங்களில் மிதந்துள்ள நுரையை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்று மீனவ கிராம மக்கள் தொடர் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
எம்எல்ஏ கூறியது என்ன?இதுகுறித்து கூடங்குளம் அருகேயுள்ள ராதாபுரம் நொகுதி எம்எல்ஏவும், தமிழ்நாடு சபாநாயகருமான அப்பாவு நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "கூடங்குளத்தில் அமைக்கப்படும் கட்டுமானங்களால் மீனவர்களின் நலன் பாதிக்காதவாறு அமைய வேண்டும். சரியான திட்டமிடுதல் இல்லாமல் அமைக்கப்படுவதால் கடலில் அலைகளின் தாக்கம் அதிகமாக இருப்பதாக மீனவர்களின் புகார் மீது மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொள்ள வேண்டும்" என்று பேசினார்.
கடலுக்குள் துறைமுகம் கட்ட வேண்டும் என்றால் சுற்றுச்சூழல் துறை உள்பட அரசு துறைகளிடம் முறைப்படி அனுமதி பெற வேண்டும் எனவே கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் உரிய அனுமதியுடன் தான் துறைமுகம் அமைக்கிறார்களா என்ற கேள்வி இந்த விவகாரத்தின் மூலம் பலரின் மனதில் எழுந்துள்ளது.
மாவட்ட ஆட்சியரின் பிரத்யேக தகவல்:இதன் உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காக திருநெல்வேலி ஆட்சியர் கார்த்திகேயன் ஈடிவி பாரத் சார்பில் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டபோது அவர் பேசியதாவது, "கட்டுமான பணிகளை மேற்கொள்ள கடலோர ஒழுங்குமுறை ஆணையம், சுற்றுச்சூழல் துறை போன்றவற்றிடம் அனுமதி பெற்று இருப்பதாக அணுமின் நிலைய நிர்வாகம் எங்களிடம் தகவல் தெரிவித்துள்ளது.
அது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளேன். மேலும் இந்த கட்டுமான பணிகளால் தங்களுக்கு பிரச்சினை ஏற்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே சுற்றுச்சூழல் துறை மூலம் விரிவான ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்வார்கள். அதே போல் தொழில் நுட்ப ரீதியாக பிரச்சனை இருப்பதை ஆராயவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு பிரச்னை ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்
இதனிடையே, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல் நடைபெறும் பணிகளால் தான் இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவதாக அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த சுப உதயகுமார் ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:தமிழகத்தில் பிறமொழியினரின் பங்கு இவ்வளவா?.. 'தி லாங்குவேஜ் அட்லஸ் ஆஃப் தமிழ்நாடு' ஆய்வு சொல்வது என்ன?