சென்னை: சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தென்றல் ராஜா - இந்திரா தம்பதி. இவர்களது மகன் தென்றல் தினேஷ் அவரது மகன் நித்திஷ் ஆகியோர் ஒன்றாக வசித்து வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு தனது 28 வயதிலேயே தென்றல் தினேஷ் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேலும், தென்றல் தினேஷ் உயிரிழப்பதற்கு முன்னதாகவே அவரது மகன் நித்திஷை வில் அம்பு எய்தல் போட்டியில் இந்திய நாட்டிற்காக ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் வெல்ல வைக்க வேண்டும் என ஆசைப்பட்டதாகவும், அதற்கான பயிற்சியை வழங்கவேண்டும் என்று நினைத்துள்ளார்.
வேர்ல்ட் எங் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெகார்ட்ஸ் நிகழ்ச்சி (Credits- ETV Bharat Tamil Nadu) இத்தகைய சூழலில் தென்றல் தினேஷ் இளம் வயதிலேயே உயிரிழந்ததை அடுத்து, தற்போது 1ம் வகுப்பு படித்து வரும் ஆறு வயதன தென்றல் தினேஷின் மகன் நித்திஷ், தாத்தா பாட்டியின் அரவணைப்பிலேயே வளர்ந்து வருகிறான். நித்திஷின் தாத்தா, பாட்டியான தென்றல் தினேஷின் பெற்றோர், தனது பேரன் வில் அம்பு எய்தல் போட்டியில் இந்திய நாட்டிற்காக ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் வெல்ல வைக்க வேண்டும் என்ற தென்றல் தினேஷின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, ஆறு வயது சிறுவன் நிதிஷை கடந்த 2022ஆம் ஆண்டு வில் அம்பு எய்தல் விளையாட்டு பயிற்சியில் சேர்த்து பயிற்சி அளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:சீனப் பெண்ணை தமிழர் முறைப்படி கரம்பிடித்த தேனி மாப்பிள்ளை!
இதன் தொடர்ச்சியாக, கடந்த இரண்டு ஆண்டுகள் பயிற்சி முடிவடைந்த நிலையில் நித்திஷ் பிறந்த நாளையொட்டி வில் அம்பு எய்தல் விளையாட்டில் சாதனைபுரியும் விதமாக 14 நிமிடத்தில் 140 அம்புகளை எய்து சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கில் வேர்ல்ட் எங் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெகார்ட்ஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், 14 நிமிடத்தில் 140 அம்புகள் எய்தல் என்ற இலக்கை 10 நிமிடம் 21 வினாடிகளிலேயே 140 அம்புகளையும் எய்து யாரும் எதிர்பார்க்காத வகையில் சாதனை செய்து அசத்தியுள்ளார். இந்த நிலையில், ஆறு வயது சிறுவன் நித்திஷின் இந்த சாதனை வேர்ல்ட் எங் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெகார்ட்ஸில் இடம்பெற்று, சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களை நிறுவனத்தின் மேலாளர் நித்திஷ்க்கு வழங்கினர்.
இது குறித்து நித்திஷின் தாத்தா பாட்டி கூறுகையில், "எங்களது மகன் இளம் வயதிலேயே உயிரிழந்த நிலையில் அவரது ஆசையை நிறைவேற்றும் விதமாக, எங்களது பேரன் வில் அம்பு எய்தல் பயிற்சி பெற்று சாதனை படைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும், இது போன்ற பல்வேறு சாதனைகளை படைக்கவும், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.