திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி காவல் உட்கோட்டம் விஜயநாராயணம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்திய கடற்படை வளாகம் உள்ளது. இங்கு மத்திய பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் நேற்று 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவர் திடீரென மோதிக் கொண்டுள்ளனர்.
மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்த மாணவன், தனது வாட்டர் பாட்டிலை எடுத்து நாங்குநேரி மாணவன் மீது தண்ணீர் சிந்தியதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையின் போது ஒரு மாணவர் மற்றொரு மாணவரை வாட்டர் பாட்டிலால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று வழக்கம் போல் பள்ளி செயல்பட்ட நிலையில், பிரச்னை ஏற்பட்ட இரு மாணவர்களில் நாங்குநேரியை சேர்ந்த மாணவர் திடீரென புத்தகப் பையில் இருந்து விவசாய தேவைக்கு பயன்படுத்தும் சிறிய வகை கதிர் அரிவாளை எடுத்து மூலக்கரைப்பட்டி மாணவன் தலையில் வெட்டியுள்ளார்.
இதனைப் பார்த்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் காயமடைந்த மாணவனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், நேற்று ஏற்பட்ட பிரச்னைக்கு பழி தீர்க்கும் விதமாக இன்று மாணவன் தனது வீட்டில் இருந்து அரிவாளை புத்தக பையில் மறைத்து வைத்து பள்ளிக்கூடம் எடுத்து சென்றது தெரியவந்துள்ளது. பாதுகாப்புத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளியில் அரிவாளைக் கொண்டு பழிவாங்கும் அளவுக்கு மாணவர்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, இந்த மோதல் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தாக்கிய மாணவரைக் கைது செய்துள்ள போலீசார், அவரை சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: செம்பியம் பெண் சிறப்பு எஸ்ஐ மாரடைப்பால் மரணம்.. திடீரென எடுத்த வாந்தி.. போலீஸ் தீவிர விசாரணை..!