திருச்சி:உச்சி வெயில் உக்கிரமாய் எரிந்து, உடலில் உள்ள அத்தனை நீரையும் உறிஞ்சி ஆவியாக்க, களைத்து நிழலைத் தேடும் மானுடர்கள் இங்கு ஏராளம். மழை பெய்தால் ஏன் தொடர்ந்து பெய்கிறது என கரித்துக் கொட்டியவர்கள் கூட, தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பு அனலாய் சாலைகளில் வெப்ப காற்று வீசுவதால், நிழலை விட்டு விலக மனமின்றி மழையை எதிர்நோக்கி காத்துக் கிடக்கின்றனர்.
திருச்சியில் 106 டிகிரி வெயில் பதிவாகியுள்ள நிலையில், தங்கள் வயிற்று பிழைப்புக்காக சுட்டெரிக்கும் வெயிலைக்கூட பொருட்படுத்தாமல், சாலையோரங்களில் சிறுகடைகள் அமைத்து நடத்தி வருகின்றனர் சாலையோர ஏழை சிறு வியாபாரிகள். இந்நிலையில், இந்த சாலையோர ஏழை வியாபாரிகளுக்கு குடை தந்து, விசிறி தந்து கோடை வெப்பத்தை தணிக்க உதவியுள்ளார், 10ஆம் வகுப்பு முடித்த பள்ளி மாணவி சுகித்தா.
சிலம்பத்தில் கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தியும், தொடர் சமூக சேவை மற்றும் பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்காக சேவை புரிந்தும் வரும் சுகித்தாவுக்கு, பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்கான விருது மற்றும் ஒரு லட்சம் காசோலை வழங்கி மாநில அரசு சிறப்பித்துள்ள நிலையில், அதனை பல்வேறு சமூக சேவைகளுக்காக பயன்படுத்தி வருகிறார், மாணவி.
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் வசிக்கும் மோகன் - பிரபா தம்பதியினரின் மகள் சுகித்தா. இவர் பண்டிகை காலங்களில் புத்தாடை, குளிர்காலத்தில் கம்பளி, போர்வை, ஆதரவற்றோருக்கு உணவு, உடை மற்றும் வெயில் காலங்களில் காலணி என தான் சேகரித்த பணத்தைக் கொண்டும், பெற்றோர் தரும் தொகை மற்றும் சிலம்பப் போட்டிகளில் கிடைக்கும் பரிசு தொகைகளைக் கொண்டும், தன்னால் முடிந்த உதவிகளை ஆதரவற்றோர் மற்றும் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு வழங்கி வருகிறார்.