தேனி: ஆண்டிபட்டி அருகே முத்துகிருஷ்ணாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 'விண்மீன்கள் ஒரு பார்வை' என்ற நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. வானியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் பள்ளி மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் இந்நிகழ்ச்சிக்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுடன் சேர்ந்து அப்பகுதி பொதுமக்களும் ஏராளமானோர் பள்ளிக்கு வந்தனர்.
முன்னதாக பள்ளியில் உள்ள வகுப்பறைகளில், விண்மீன்களின் மாதிரி வடிவங்கள் பிரதிபலிப்பு வண்ண காகிதங்களால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டது. அவை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வானத்தில் உள்ளவாறே வகுப்பறை மதில் சுவற்றில் செங்குத்தாக நிலைநிறுத்தி வரிசையாக அமைக்கப்பட்டிருந்தன.
அதேபோல் சூரிய குடும்பங்கள் குறித்தும், கோள்கள் மற்றும் அவை சுற்றும் விதம் குறித்தும் தெளிவாக பட விளக்கம் செய்யப்பட்டிருந்தது. மேலும் விண்வெளிக்கு ராக்கெட் மற்றும் விண்கலன்களின் மாதிரி மின் விளக்குகளுடன் அமைக்கப்பட்டிருந்தது.