தேனி:தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற திருட்டு வழக்கில் தேவதானப்பட்டியைச் சேர்ந்த வயது 47 கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று (பிப்.20) வழக்கு விசாரணைக்காகப் பெரியகுளத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்குத் தேனி ஆயுதப்படை காவல்துறையினர் இருவர் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்பு, அழைத்துச் செல்லும் பொழுது தென்கரை வள்ளுவர் சிலை அருகே விசாரணைக் கைதி காவலர்களைத் தள்ளி விட்டு, அருகே உள்ள வராக நதி ஆற்றில் குதித்துத் தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளார்.
தப்பி ஓடிய விசாரணைக் கைதி விரட்டிப் பிடிக்கக் காவலர்கள் பின் தொடர்ந்த பொழுது, அவ்வழியாக வந்த தென்கரை காவல் துறையைச் சேர்ந்த காவலர்கள் சம்பவத்தை அறிந்து வராக நதி ஆற்றின் எதிர்த் திசையில் சென்று தப்பி ஓடிய விசாரணைக் கைதியை மடக்கிப் பிடித்தனர்.
இதனையடுத்து, தப்பி ஓடிய விசாரணைக் கைதி தென்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்தனர். தேனி மாவட்டத்தில் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்படும் சிறைக் கைதி மற்றும் விசாரணைக் கைதிகளுக்குக் கைவிலங்கு எதுவும் போடாமல் அழைத்துச் செல்வதால் தப்பி ஓடும் சம்பவம் இரண்டாவது முறையாக அரங்கேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தர மனமில்லாத மு.க.ஸ்டாலின்? - வன்னியர் சங்கம் குற்றச்சாட்டு