நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் (Video credits - ETV Bharat Tamil Nadu) திருநெல்வேலி:நாகர்கோவிலில் இருந்து நாங்குநேரி, திருநெல்வேலி வழியாக தூத்துக்குடி செல்லும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்தில், நாங்குநேரி நீதிமன்றம் அருகே காவலர் ஆறுமுகப்பாண்டி என்பவர் பேருந்தில் ஏறியுள்ளார். அவரிடம், பேருந்தின் நடத்துநர் டிக்கெட் எடுக்கும் படி கூறியுள்ளார்.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த காவலர், அரசுப் பணியில் உள்ளவர்கள் அனைவருக்கும் அரசுப் பேருந்தில் பயணம் செய்ய இலவசம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு மட்டும் இலவசமாக பணம் செய்ய அனுமதிப்பதை சுட்டிக்காட்டிய நடத்துநரிடம், காவலர் ஆறுமுகப்பாண்டி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதனை அடுத்து, காவலர் மற்றும் பேருந்து நடத்துநர் இடையேயான வாக்குவாதம் முற்றியதை அடுத்து பேருந்து நிறுத்தப்பட்டது. பின்னர், பேருந்தில் இருந்த சக பயணிகள் தங்களுக்கு தாமதமாவதாகக் கூறி பேருந்தை இயக்கும் படி கூறியுள்ளனர். இதனிடையே, அங்கு பணியில் இருந்த மற்றொரு காவலர், வாக்குவாதத்தில் ஈடுபட்டவரை டிக்கெட் எடுக்கும் படி அறிவுறுத்தியும், அவர் டிக்கெட் வாங்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, பேருந்தில் இருக்கும் மற்ற பயணி ஒருவர் அவருக்கான டிக்கெட்டை தான் எடுப்பதாகக் கூறி, இருவரையும் சமாதானப்படுத்தினார். இச்சம்பவத்தை பேருந்தில் இருந்த பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தது தற்போது வைரலாகி வருகிறது.
இது குறித்து, நெல்லை மண்டல போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "வாரண்ட் காப்பி (Warrant copy) இருந்தால் மட்டுமே காவலர்கள் அரசுப் பேருந்தில் இலவசமாக பயணம் செல்லலாம் என நீதிமன்ற உத்தரவு இருக்கிறது. வாரண்ட் இல்லாத பட்சத்தில், எந்த ஒரு காவலராக இருந்தாலும் அவர் கட்டாயம் டிக்கெட் எடுத்தே ஆக வேண்டும்" எனக் கூறினார்.
இந்நிலையில், நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசுப் பேருந்தில் காவலர் பயணச்சீட்டு எடுக்க மறுத்து வாக்குவாதம் செய்த காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள் கட்டணமின்றி தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பயணிக்க அனுமதி இல்லை. வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும், மற்ற நேரங்களில் காவலர்கள் பயணச்சீட்டு எடுத்து பயணிக்க வேண்டும். தூத்துக்குடி சென்ற பேருந்தில் காவலர் பயணச்சீட்டு எடுக்க மறுத்து வாக்குவாதம் செய்த நிலையில், காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "கடந்த 2021 - 2022 ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், பணி செய்யும் மாவட்டத்துக்குள் அரசு பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மூன்று ஆண்டுகள் கடந்தும், இது குறித்து போக்குவரத்துக் கழகங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.
உடனடியாக இந்த அறிவிப்பு குறித்து, அனைத்து மாவட்டப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் தெரியப்படுத்துவதோடு, பணி செய்யும் மாவட்டங்களில், காவலர்களுக்கு இலவசப் பேருந்து பயணம் என்ற அறிவிப்பை தமிழகம் முழுவதும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இந்தச் சம்பவத்துக்காக காவலர் ஆறுமுகப்பாண்டி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கூடாது" தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வலியுறுத்தி பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:விழுப்புரத்தில் லாக்கப் டெத்? வீட்டுக்கு வந்து இறந்த நபர்.. கோர்ட் உத்தரவால் மறு பிரேத பரிசோதனை!