கோவையில் ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு கோயம்புத்தூர்:கோவை சேரன் மா நகர் பகுதியில் உள்ள வினோபாஜி நகரில் செயல்பட்டு வரும் தனியார் உணவகம் அருகே பெட்டிக்கடை ஒன்று உள்ளது. அந்த பெட்டிக்கடைக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை சில இளைஞர்கள் சென்று சிகரெட் கேட்டுள்ளனர். இதையடுத்து, சிகரெட்டுக்கான பணத்தை கடைக்காரர் கேட்ட நிலையில், அவர்கள் கடைக்காரரிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து சென்ற இளைஞர்கள், இரவு சுமார் 9.40 மணி அளவில் மீண்டும் அந்த பெட்டிக்கடைக்கு வந்து, பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். ஆனால், தவறுதலாக அந்த பெட்ரோல் குண்டு பெட்டிக்கடைக்கு அருகே இருந்த ஹோட்டல் அருகே விழுந்து வெடித்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வினோபாஜி நகரைச் சேர்ந்த வரதராஜன்(25) என்பவரை மடக்கிப் பிடித்தனர். குடிபோதையில் இருந்த அவர், சிகரெட் கேட்டு தகராறு செய்து விட்டு, தனது நண்பர்களுடன் வந்து பெட்ரோல் குண்டு வீசியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, பெட்ரோல் குண்டு வீசிய வரதராஜனைப் பிடித்த போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசராணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அவருடன் வந்த மற்ற 2 இளைஞர்களையும் போலீசார் தற்போது தேடிவருகின்றனர். பெட்ரோல் குண்டு உணவகத்தின் அருகே வெடித்த நிலையில், உணவகத்திலும் லேசான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இருப்பினும், தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சிதம்பரத்தில் திருமாவளவனின் தற்காலிக வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை! - VCK Thirumavalavan House IT Raid