விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரசூர் அருகே உள்ள டி.குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயராமன், முருகன் மற்றும் சிவச்சந்திரன். இவர்கள் மூவரும் சேர்ந்து கடந்த சனிக்கிழமை (ஜூன் 29) அன்று கள்ளச்சாராயம் குடித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜெயராமன், முருகன் மற்றும் சிவச்சந்திரன் ஆகிய மூவருக்கும் திடீரென வயிற்று வலி மற்றும் எரிச்சல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து, உடனடியாக அவர்களது உறவினர்கள் மூவரையும் அருகில் உள்ள இருவேல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு, அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் முருகன் மற்றும் சிவச்சந்திரன் ஆகியோர் சற்று உடல் தேறிய நிலையில் பொது வார்டிற்கு மாற்றப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால், ஜெயராமன் என்பவருக்கு உடல்நிலை அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளானதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஜெயராமன் இன்று (ஜூலை 04) அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது குறித்து ஜெயராமனின் மருமகன் அன்பழகன் என்பவர் கூறும்போது, "கடந்த சனிக்கிழமை எனது மாமனாருக்கு திடீரென உடல்நல கோளாறு என்று போன் வந்தது. அதன் அடிப்படையில், அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம்" என்று தெரிவித்தார்.