தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த வல்லம் புதுசேத்தி பகுதியில், தனியார் கார் கம்பெனி ஷோரூம் இயங்கி வருகிறது. இங்கு, கடந்த மார்ச் 22ஆம் தேதி ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய சொகுசு கார் ஒன்றை இளைஞர் ஒருவர் யாருக்கும் தெரியாமல் எடுத்துக் கொண்டு, பிள்ளையார்பட்டி ரவுண்டானா வரை வந்துள்ளார்.
அப்போது, காரில் போதுமான அளவு பெட்ரோல் இல்லாததால் கார் நடுவழியிலேயே நின்றுள்ளது. சாலையின் நடுவில் கார் நிற்பதைக் கண்ட பொதுமக்கள், இது குறித்து வல்லம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வல்லம் காவல் நிலைய போலீசார், காரில் இருந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால், காருடன் சேர்த்து அந்த இளைஞரையும் வல்லம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், போலீசார் அந்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் (31) என்பதும், வல்லம் புதுசேத்தியில் இயங்கி வரும் தனியார் கார் கம்பெனி ஷோரூமிலிருந்து அந்த காரை திருடி வந்ததும், பெட்ரோல் தீர்ந்ததால் சாலையிலேயே காரை நிறுத்தி வைத்ததும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து, கார் கம்பெனி ஷோரூம் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஹரிபிரசாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட காரின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மீது வழக்குப்பதிவு.. காரணம் என்ன? - ADMK Candidate Jayavardhan