விருதுநகர்: பட்டாசு உற்பத்தி விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழிலாக உள்ளது. இந்த தொழிலில் சுமார் 5 லட்சம் பேர் நேரடியாக ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த மே 9ஆம் தேதி சிவகாசி அருகே நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அதிகாரிகளின் விசாரணையில் விதிமீறல்கள்தான் காரணம் என கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் அடிப்படையில் சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டு பட்டாசு ஆலைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, விதிகளை மீறி செயல்பட்ட பல ஆலைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பட்டாசு ஆலையில் பணியாற்றி வந்த பல்லாயிரம் தொழிலாளர் வேலை இழந்து வருகிறார்கள்.
அதேபோல், விதிகளை சரியான முறையில் கடைபிடித்து வரும் பட்டாசு ஆலைகளில் பருவமழை காரணமாக தற்போது பணிகள் நடைபெறாமல் உள்ளது. இதன் காரணமாக, அதில் பணியாற்றி வந்த தொழிலாளர்களும் தற்போது வேலை இன்றி தவித்து வருகிறார்கள்.
பட்டாசு ஆலைகளில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்குத் தேவையான பணத்தை தெரிந்தவர்களிடம் கடனாகப் பெற்றும், அதனை சம்பளம் வந்த பின்னர் திருப்பிச் செலுத்தியும் வருகிறார்கள். பலர் வாரம் மற்றும் மாத வட்டிக்கு பணம் வாங்கி உள்ளனர்.
இந்த சூழலில், தற்போது வேலை வாய்ப்பு இல்லாததால் கடன் வாங்கிய பலர் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகாசியைச் சேர்ந்த தாய் மாற்றும் மகள் இருவரும் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த தற்கொலை சம்பவத்தின் எதிரொலியாக, மீனம்பட்டி கிராமத்தின் நுழைவு பகுதியில் ஊர் நாட்டாமையான ஞானம் மற்றும் கணக்கர் பன்னீர்செல்வம் ஆகியோர் சார்பில் ஒரு அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், "அன்புடையீர் வணக்கம், நமது மீனம்பட்டி கிராமத்தில் பட்டாசு தொழில் முடக்கப்பட்டுள்ளதால், தற்சமயம் நம் மக்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால் கடன்காரர்கள் மற்றும் குழுகாரர்கள் யாரும் 05/06/2024 முதல் 05/07/2024 வரை கடன் வசூலிக்க வேண்டாம் என்று தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறியுள்ளனர்.
இந்த அறிவிப்பு சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலை தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. மேலும், மாவட்டத்தின் மிக முக்கிய தொழிலான பட்டாசு தொழில் பெரும் சரிவுக்குச் சென்றுள்ள நிலையில், தொழிலாளர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆய்வு என்ற பெயரில் பட்டாசு தொழிலை முடக்கினால், அதன் மூலம் பெரும் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது எனவும், எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு உடனே தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க:சென்னை சென்ட்ரலில் பயணியின் கைப்பையை நைசாக லவட்டி சென்ற நபர்... போலீசில் சிக்கியது எப்படி?