தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர் ஒருவர் மூன்றரை அடி உயரத்தில் 10 கிலோ கொண்ட வெள்ளி வேலை முருகனுக்கு, காணிக்கையாக வழங்கிய சம்பவம் பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூருக்கு, தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக, திருவிழா மற்றும் விடுமுறை தினங்களில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தந்து தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
அப்படி, கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயில் உள்ள உண்டியல்களில், பணம், தங்க நகை, வெள்ளிப் பொருட்கள் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துவார்கள். அவ்வாறு செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் மாதம் ஒருமுறை எண்ணப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த மாதத்திற்கான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகள் இன்று (ஜன.10) காலையில் தொடங்கியது. கோயில் உண்டியலில் இருந்த காணிக்கைகள் அனைத்தையும், கோயில் பணியாளர்கள் மொத்தமாக வசந்த மண்டபத்துக்கு கொண்டு வந்து அங்கு பிரிக்கப்பட்டு எண்ணும் பணி நடைபெற்றது.