மதுரை:சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 32 வயது பெண்ணுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையின் மூலமாக குழந்தைப்பேறடைய வைத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் வாயிலாக இந்த மருத்துவ சிகிச்சைகளை சித்ரா மேற்கொண்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் ராஜ் என்பவரின் மனைவி சித்ரா (32). இவர், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் நாள்பட்ட சிறுநீரக நோயினால் (Chronic kidney disease) பாதிக்கப்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சிறுநீரகத் துறை மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்தார். Haemodialysis என்ற சிகிச்சை அவருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது என்கிறார் ராஜாஜி மருத்துவமனை மகப்பேறியில் துறை தலைவர் மகாலட்சுமி.
மேலும், அவர் கூறுகையில், 'மருத்துவ வல்லுநர்களின் பரிந்துரைப்படி சித்ராவின் தாயாரின் சிறுநீரகம் பெறப்பட்டு, கடந்த 2018ஆம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, (Urology, Nephrology, Vascular surgery & Anaesthesiology) வெற்றிகராமாக மேற்கொள்ளப்பட்டன. மாற்று அறுவை சிசிச்சைக்குப் பின்னர் உரிய நோய்த்தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொண்டு தொடர் கண்காணிப்பில் இருந்தார்.
பின்னர் அவர் கர்ப்பகால முன் கவனிப்பு ஆலோசனை பெற்று (Pre - conception counselling) 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கருவுற்றார். அவரது கர்ப்ப காலத்தில் எங்களது வல்லுநர் குழு, அவருக்குத் தேவையான ஆலோசனைகள், பரிசோதனைகள், சிகிச்சைகளை மேற்கொண்டு, தாயும் சேயும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி சித்ராவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அவர் உள்நோயாளியாக பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டு தாய் மற்றும் சேய் நலன் கருதி அறுவை சிகிச்சை - மூலமாக ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.