தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொத்துக்காக கொடுமைப்படுத்தினர்.. மகன்-மருமகள் மீது தாய் புகார்! - Property issue complaint - PROPERTY ISSUE COMPLAINT

Property issue complaint: உத்தமபாளையத்தைச் சேர்ந்த மூதாட்டி, தனது கணவரின் கோடிக்கணக்கான சொத்தை அபகரித்துக் கொண்டு மூத்த மகனும், மருமகளும் தன்னை அடித்து தாக்கியதாக தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த மூதாட்டி
தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த மூதாட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 2, 2024, 3:05 PM IST

தேனி: உத்தமபாளையம் கம்போஸ்ட் ஓடை தெருவைச் சேர்ந்தவர் தமயந்தி (77). இவரது கணவர் பொன்னுச்சாமி, மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு மதுரையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளது.

தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த மூதாட்டி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவரது மனைவி தமயந்தி, தனது மூத்த மகனும், மருமகளும் தனது கணவருக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான வீடு உள்ளிட்ட சொத்துக்களை தன்னை மிரட்டி கையெழுத்து வாங்கி அபகரித்துக் கொண்டதாகவும், அதனை மீட்டுத் தரும்படியும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.

அந்த மனுவில், தங்களுக்கு ரஞ்சித் குமார், விஜயகுமார் மற்றும் குமார் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். மூத்த மகனான ரஞ்சித் குமாரும், அவரது மனைவி தனலட்சுமி ஆகியோரும் ஒட்டுமொத்த சொத்துக்களையும் தங்களது பெயரில் எழுதித் தருமாறு தொடர்ந்து துன்புறுத்தி வந்ததால், தனது கணவருடன் தானும் மதுரையை விட்டு வெளியேறி மற்ற மகன்களுடன் வசித்து வந்ததாகவும், தொடர்ந்து ரஞ்சித் குமாரும், அவரது மனைவி தனலட்சுமியும் சொத்தை தங்களது பெயருக்கு எழுதிக் கொடுக்கும்படி வற்புறுத்தியதால், அந்த மன வேதனையில் தனது கணவர் பொன்னுச்சாமி கடந்த 2019, மார்ச் 30 அன்று இறந்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடந்த 2021, ஏப்ரல் 7 அன்று ரஞ்சித்குமாரும், அவரது மனைவி தனலட்சுமியும் பல்வேறு ஆவணங்களில் கையெழுத்து போடும்படி தன்னை அடித்து துன்புறுத்தியதுடன், வற்புறுத்தி பல ஆவணங்களில் கையெழுத்து வாங்கியதாகவும், இதனைத் தொடர்ந்து சொத்துக்கள் அனைத்தும் மூத்த மகன் மற்றும் மருமகள் பெயருக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, தன்னை பராமரிக்காமல் அடித்து துன்புறுத்தி, சொத்துக்களை எழுதி வாங்கிய மூத்த மகன் ரஞ்சித்குமார் மற்றும் அவரது மனைவி தனலட்சுமி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனது கணவரின் சொத்துக்களை மீட்டுத் தர வேண்டும் எனவும் வயதான மூதாட்டி தமயந்தி இன்று தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்துள்ளார்.

இதையும் படிங்க:குடியிருப்பு அருகே கொடிய விஷப்பாம்புகள்.. லாவகமாக பிடித்த மீட்புப் படை வீரர்கள்! - snakes in Bodinayakanur Residency

ABOUT THE AUTHOR

...view details