சென்னை:பெரம்பலூர் மாவட்டம், சோலை நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (48). இவர் தனது சகோதரர் ஆறுமுகத்துடன் இணைந்து கோயம்பேடு மார்க்கெட்டில் சொந்தமாக டிபன் கடை நடத்தி வந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு வேலை முடிந்து சேகர் குடிபோதையில் டிபன் கடை வாசலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மது போதையில் வந்த நபர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்த சேகரை தட்டி எழுப்பியதால் ஆத்திரமடைந்த சேகர், அந்த நபரை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி, உடனே அருகில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து சேகர் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த சேகரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேகர் இன்று காலை உயிரிழந்தார்.
பின்னர் தகவல் அறிந்து கோயம்பேடு போலீசார் சம்பவயிடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். இதனையடுத்து, கொலை வழக்குப்பதிவு செய்த கோயம்பேடு போலீசார், இவ்வழக்கில் தொடர்புடைய கோயம்பேடு நெற்குன்றத்தைச் சேர்ந்த சக்தி (22) என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில், கோயம்பேடு கீரை மார்க்கெட்டில் வேலை பார்த்து வரும் சக்தி நேற்று இரவு மதுபோதையில் தனது நண்பரை பார்ப்பதற்காக ஆறுமுகம் டிபன் கடை நடத்தி வந்ததும், அப்போது தவறுதலாக நண்பரை எழுப்புவதற்கு பதிலாக அங்கு தூங்கிக் கொண்டிருந்த சேகரை எழுப்பியதால் ஆத்திரமடைந்த அவர், மதுபோதையில் இருந்த சக்தியை தகாத வார்த்தையால் திட்டியது தெரிய வந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சக்தி, அருகில் இருந்த பீர்பாட்டிலை எடுத்து சேகர் தலையில் அடித்து கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது. மதுபோதையில் இருவரும் இருந்ததால் சிறிய விவகாரம் கொலையில் முடிந்துள்ளது. இந்தச் சம்பவம் கோயம்பேடு மார்க்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன்.. வீடியோ போட மாட்டேன் என வீடியோ வெளியிட உத்தரவு