சென்னை:நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டமாக நடைபெற உள்ளது. இதில் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளதால் அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது.
இந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆவணமின்றி 50 ஆயிரத்திற்கும் மேல் பணம் மற்றும் அதிக எண்ணிக்கையில் பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது என தேசிய நெடுஞ்சாலை, மாநகரின் முக்கிய பகுதிகள், மாவட்ட எல்லையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதை முன்னிட்டு நாளை (ஏப்.17) முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரையில் ஆகிய 3 மூன்று நாள்கள் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாது, இந்த மூன்று நாட்களும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறும் என்பதால், அதைத் தடுப்பதற்காக காவல்துறை தரப்பில் தீவிர கண்காணிப்பு பணிகளும் தமிழகம் முழுவதும் மூடுக்கிவிடப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், சென்னை ராமாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
கிடைப்பட்ட இந்த தகவலையடுத்து, கங்கையம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டை, ராமாபுரம் காவல் ஆய்வாளர் தலைமையிலான குழு சோதனை செய்தனர். இந்த சோதனையில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 230 மதுபாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, மதுபாட்டில்களை பதுக்கி வைத்த குற்றத்திற்காக பிரதாப் (38) என்பவரைக் கைது செய்த போலீசார், மதுபாட்டில்களை ஏற்றிச்செல்வதற்காக அவர் பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். இதன் பின்னர், நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோல் வேறு யாரும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்துள்ளனரா? என போலீசார் தீவிரமாகத் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:ஈரோட்டில் தங்கும் விடுதியில் 3 வயதுக் குழந்தையைக் கொன்று.. தாய் தற்கொலை! - பின்னணி என்ன?