விருதுநகர்:கத்திரி வெயிலை ஒட்டி, தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. இதனிடையே, ஒரு சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்கிறது. இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது, பூவநாதபுரம் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தின் மீது இடி விழுந்துள்ளது. இதில் வேல்ஈஸ்வரன் (37) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும், பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த முருகேஸ்வரன் (42), விக்னேஷ் (13) மற்றும் சேவியர்ராஜ் (38) ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்தங்கல் போலீசார், படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.