சென்னை: நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்துக்குள் தடையை மீறி, தொடர்ந்து புகை பிடித்த பயணியைச் சென்னை விமான நிலையத்தில் விமான நிலைய போலீசார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரிலிருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், வழக்கம் போல் நேற்று மாலை 164 பயணிகளுடன், சிங்கப்பூரிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து கொண்டு இருந்தது. இதற்கிடையே விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் பயணித்த பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த காமராஜ்(42) என்பவர் விமானத்திற்குள் புகை பிடித்துள்ளார்.
அதைக் கண்ட சக பயணிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அதோடு விமானப் பணிப்பெண்களும் பாதுகாப்பு காரணமாக விமானத்திற்குள் புகை பிடிக்க அனுமதி இல்லை என்று கூறியதோடு, பயணியிடம் கடுமையாக எச்சரிக்கவும் செய்துள்ளனர். ஆனாலும், பயணி காமராஜ் அவ்வப்போது யாருக்கும் தெரியாமல், கழிவறைக்குள் சென்று அங்கிருந்து ரகசியமாகப் புகை பிடித்து விட்டுத் திரும்பி வந்துள்ளார்.
இதனைக் கவனித்த விமானப் பணிப்பெண்கள் மீண்டும் பயணியை எச்சரித்தோடு, தலைமை விமானியிடம் புகார் அளித்துள்ளனர். அதையடுத்து, விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு பயணி ஒருவர் விமானத்துக்குள் புகை பிடித்து ரகளை செய்கிறார் என்று தகவல் அனுப்பியுள்ளார்.