சேலம்:சேலம் ரயில்வே உட்கோட்டத்துக்குட்பட்ட கோயம்புத்தூர், ஈரோடு, மயிலாடுதுறை மற்றும் தூத்துக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து சேலம், தருமபுரி மற்றும் ஓசூர் வழியாக பெங்களூரு செல்லும் ரயில்களில் ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்கும் பெண்களிடம் மர்ம நபர்கள் செயின் பறிக்கும் சம்பவம் நடைபெற்று வருகின்றன.
செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபடும் நபர்களைப் பிடிப்பதற்காக தமிழ்நாடு ரயில்வே காவல்துறை கூடுதல் இயக்குனர் வனிதாவின் உத்தரவுபடி, சேலம் ரயில்வே காவல் ஆய்வாளர் சிவ செந்தில்குமார் தலைமையில், உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜன் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் தேவராஜன் அடங்கிய தனிப்படையினர், ஓடும் ரயிலில் நகைப் பறிப்பில் ஈடுபடும் நபர்களைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், சேலம் ரயில் நிலையத்தில் பழைய சூரமங்கலத்தைச் சேர்ந்த மணிவேல் என்பவரிடம், வடமாநில நபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி இரண்டு சவரன் நகையை பறித்துச் சென்றுள்ளார். இது குறித்த புகாரின் பேரில், சேலம் ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.