தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் லாட்டரி சீட்டு விற்றவர் வீட்டில் சோதனை.. கட்டுக்கட்டாக சிக்கிய பணம் - நடந்தது என்ன? - LOTTERY TICKET SALE

கோவையில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் நபரின் வீட்டில் இருந்து ரூ.2.5 கோடியை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம்
பறிமுதல் செய்யப்பட்ட பணம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 22 hours ago

கோயம்புத்தூர்: கருமத்தம்பட்டியில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்யும் நபரின் வீட்டிற்குள் இரண்டு கோடி அளவிற்கு பணம் பதுக்கி வைத்திருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அந்த நபரையும் சிறையில் அடைத்துள்ளனர்.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு ராஜேஸ்வரி என்ற நபருடன் திருமணமாகி நாகராஜ் என்ற மகனும், ஜோதிமணி என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு, சண்முகம் இறந்த நிலையில் தற்போது வரை நாகராஜ் திருமணமாகாமல் வீட்டில் உள்ளதாகவும், அக்கா ஜோதிமணிக்கு திருமணமாகி தனியே வசித்து வருவதாகவும் கூறுகின்றனர்.

லாட்டரி சீட்டு விற்பனை:

தற்போது, நாகராஜன் தனது தாய் ராஜேஸ்வரியுடன் வசித்து வரும் நிலையில், கேரள மாநிலம் வாளையார் பகுதியில் உள்ள லாட்டரி சீட் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்துள்ளார். அதனால், அவ்வப்போது அந்த லாட்டரி சீட்டுகளை கருமத்தம்பட்டி பகுதியில் விற்பனை செய்து வந்ததாகவும், அதற்காக நாகராஜன் மீது சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட வழக்குகள் கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

கருமத்தம்பட்டி காவல் நிலையம் (ETV Bharat Tamil Nadu)

அதிரடி சோதனை:

இந்த நிலையில் கேரளம் லாட்டரி சீட்டுகள் விற்பனை தொடர்பாக மாவட்ட கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், கருமத்தம்பட்டி உட்கோட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ஏற்கனவே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்த நாகராஜ் வீட்டிலும் சோதனை செய்ய போலீசார் வந்துள்ளனர். அப்போது, போலீசார் சோதனைக்கு சென்றபோது நாகராஜன் வீடு குப்பை மிகுந்தும் பயன்படுத்த முடியாத அளவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:பெருகி வரும் டிஜிட்டல் அரெஸ்ட்.. ஒரு ரூபாய் கூட இழக்காதீங்க.. உடனே என்ன செய்யணும்..?

கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்:

அந்த சோதனையின் போது, நாகராஜ் வீட்டில் சுமார் 2.5 கோடி பணம் கட்டுக்கட்டாகவும், ரூ.2 லட்சத்திற்கு மேற்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளும் இருந்துள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அனைத்தையும் பறிமுதல் செய்து, நாகராஜையும் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது, இந்த பணம் யாருடையது? சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்ததில் வந்ததா? அல்லது ஹவாலா பணமா? என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் நாகராஜை கைது செய்த போலீசார், சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

கைதான நபருடன் பறிமுதல் செய்த பணம் (ETV Bharat Tamil Nadu)

இதுகுறித்து போலீசார் கூறுகையில், "சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்து வருவது குறித்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் ஆன்லைன் மூலமும் லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில், அவ்வப்போது திடீர் சோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது" என்றார். மேலும், சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details