'பன்முகக் கலைஞர்' தலைப்பில் 10-ஆம் வகுப்பு பாடத்தில் கருணாநிதி வரலாறு.. சிறப்புத் தொகுப்பு! சென்னை:தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 2 கோடி 68 லட்சம் விலையில்லா பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும், மாணவர்களுக்கு விற்பனை செய்ய ஒரு கோடியே 32 லட்சம் பாடப்புத்தகங்கள் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலம் 4 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
இதுமட்டும் அல்லாது, பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு வழங்குவதற்காக மாவட்டங்களுக்கு மூன்று கோடியே 50 லட்சம் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதே போல, 50 லட்சம் புத்தகங்கள் வருகின்ற மே மாதம் முதல் வாரத்திற்குள் அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பள்ளிக் கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இத்தகைய சூழலில், தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 2017-2018ஆம் ஆண்டு முதல் திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 2019ஆம் ஆண்டு முதல் முறையாக திருத்தப்பட்ட புதிய பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டன.
2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பின்னர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டு 9ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைப்பதற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பாடமாகச் சேர்க்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் நடப்பாண்டில் உரைநடை பகுதியில் பன்முக கலைஞர் என்ற தலைப்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பல்வேறு திறன்கள் குறித்தும், தமிழ் மற்றும் கலைத்துறையில் செய்த பணிகள் குறித்தும் பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பாடப் பகுதியின் இறுதியில் தமிழ் வெல்லும் என்று அவரின் கையெழுத்தையும் பதித்துள்ளனர். பல்வேறு திறன்கள் மூலம் அரசியல் மற்றும் எழுத்து உலகிலும் சிறந்து விளங்கினார் என்பதற்காக அவரின் திறமைகளை விளக்கும் வகையில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் ஒரு பாடமாகச் சேர்த்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:2024 தொழிலாளர் தினம்.. வைகோ வாழ்த்து!