திருநெல்வேலி:இந்திய சட்டப்படி திருமணம் செய்து கொள்ள பெண்களுக்கு 18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் சட்டத்தை மீறி, தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் 18 வயது நிரம்பாத ஆண் மற்றும் பெண்களுக்கு குழந்தை திருமணம் நடத்தி வைக்கும் கலாச்சாரம் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு தொடக்கம் வரை தமிழகம் முழுவதும் 2,638 குழந்தை திருமணங்கள் மாவட்ட சமூக நல அலுவலர்களால் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், குழந்தை திருமண தடைச் சட்டம் 2006-இன் கீழ் 707 குழந்தை திருமணங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-இன் கீழ் தெரிய வந்துள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் அதிகளவு குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, குழந்தை திருமணங்களை தடுக்க, தமிழக அரசு சார்பில் சமூக நலத்துறை மற்றும் பல்வேறு அரசுத் துறைகள் இணைந்து தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் எந்தெந்த ஊர்களில் அதிகளவு குழந்தை திருமணங்கள் நடைபெறுகிறது என அரசு நடத்திய ஆய்வில், தென் தமிழகத்தில், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகாவுக்கு உட்பட்ட பாப்பாக்குடி கிராமத்தில் அதிகளவு குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதாக தெரிய வந்துள்ளது.
எனவே, அங்கு சமூக நலத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து குழந்தை திருமணங்களை தடுக்க மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். அதிகாரிகள் இதுபோன்ற விஷயங்களில் பள்ளி மாணவர்களைக் கொண்டும், தன்னார்வர்களைக் கொண்டும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது வழக்கம்.
இந்த நிலையில், சற்று வித்தியாசமாக குழந்தை திருமணங்களை தடுக்க திருநெல்வேலியில் அரசு பெண் அதிகாரி ஒருவர் தானே களத்தில் இறங்கி, கிராமியக் கலையான வில்லுப்பாட்டு மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சம்பவம் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த கோமதி கிருஷ்ணமூர்த்தி என்பவர், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று, தமிழக அரசு துறையில் பணியில் சேர்ந்தார். பிறகு அடுத்தடுத்த பதவு உயர்வு பெற்று, தற்போது திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது கட்டுப்பாட்டில் தான் பாப்பாக்குடி கிராமம் அமைந்துள்ளது.
அங்கு அதிகளவு குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை அறிந்து வேதனை அடைந்த கோமதி கிருஷ்ணமூர்த்தி, பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆழமான விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்துள்ளார். வழக்கம்போல் பேரணி, கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மாணவர்கள் செவி சாய்க்க மாட்டார்கள் என்பதை அறிந்த கோமதி கிருஷ்ணமூர்த்தி, தானே களத்தில் இறங்கி கிராமியக் கலையான வில்லுபாட்டை பாடி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வைக் கொண்டு செல்ல முடிவு செய்தார்.
அதன்படி, இந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்கு பள்ளிகளில் வருவாய் ஆய்வாளர் கோமதி கிருஷ்ணமூர்த்தி, சக அரசு அலுவலர்களுடன் இணைந்து வில்லுப்பாட்டு மூலம் மாணவர்கள் மத்தியில் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். தமிழர்களின் பாரம்பரியக் கலைகளில் ஒன்றான வில்லுப்பாட்டின் கலை நயம் சற்றும் குறையாமல், அசல் வில்லு கலைஞராகவே கோமதி கிருஷ்ணமூர்த்தி மாறியுள்ளார்.
“தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட...” என்று தனது வரிகளை தொடங்கி, “குழந்தைகளின் திருமணத்தை தடுக்கனுமே.. படிக்காம போனா.. பின்ன தவிக்கனுமே... குழந்தைகள் கரங்களில் கல்வியைக் கொடுப்போம். நல்ல புதுயுகம் படைப்போம். நாளைய பாரதம் காப்போம்” என புரட்சியான வரிகளில் தனது வில்லுப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
அவரே எழுதிய இந்த வரிகளுடன், வில்லுக்கு தேவைப்படும் மண்பானை, வில்லு, வீசுகோல் ஆகியவற்றை ஒரு நாளைக்கு முன்பு தயார் செய்துள்ளார். இவருடன் சேர்ந்து சமூக நலத்துறையைச் சேர்ந்த மற்றொரு அரசு அலுவலரான பத்மா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களும் இணைந்து வில்லுப்பாட்டு பாடி வருகிறார்கள். பத்மா ஆண் வேடம் அணிந்தும், கோமதி பெண் வேடத்திலும் கிராமிய பேச்சு வழக்கோடு வில்லுப்பாட்டை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
குறிப்பாக ‘மச்சான்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி மாணவர்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்கின்றனர். இதனால் மாணவர்கள் இந்த வில்லுபாட்டை ரசித்து கேட்டு, அதன் அர்த்தங்களை உள்வாங்குகின்றனர். இது மட்டுமல்லாமல், சமீபத்தில் போதை ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்ட நிலையில், அன்றைய தினம் கோமதி கிருஷ்ணமூர்த்தி முக்கூடலில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் தானே வேடமிட்டு நாடகம் நடத்தியிருந்தார்.
அதில் எமதர்மராஜா வேடமணிந்து மது, கஞ்சா போன்ற போதையால் ஏற்படும் தீமைகள் குறித்து தத்ரூபமாக நாடகம் நடத்தி இருந்தார். சமூக நலன் சார்ந்த விஷயங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல தானே களமிறங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கோமதி கிருஷ்ணமூர்த்தியின் செயல், முக்கூடல் பகுதி மக்களிடமும், சமூக ஆர்வலர்களிடமும் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
இது குறித்து கோமதி கிருஷ்ணமூர்த்தி நம்மிடம் கூறும் போது, “பாப்பாக்குடி பகுதியில் அதிகளவு நடைபெறும் குழந்தை திருமணங்களை தடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார். இதற்காக நாங்கள் வில்லுப்பாட்டு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பொதுவாக நான் பள்ளி மற்றும் கல்லூரி பருவத்தில் இது போன்ற பொது மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பேன்.
எனவே, கிராமியக் கலையான வில்லுப்பாட்டு மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் எளிதில் புரியும் என்று தான் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். அதிகாரியாக இருந்தாலும் ஒரு கருத்தை வாய் வழியில் சொல்லாமல் நாமே இறங்கி அதை செயல்படுத்திக் காட்டினால் மாணவர்களுடன் நல்ல தொடர்பு கிடைக்கும், அவர்களும் எளிதில் நமது கருத்துக்களை புரிந்து கொள்வார்கள். அதற்காகவே இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். அடுத்தடுத்து அரசுத் தரப்பில் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் இது போன்று வேடம் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது அடுத்தகட்ட திட்டம்” என்று பெருமையோடு கூறினார்.
இதையும் படிங்க:மூடப்படுகிறதா 1.50 லட்சம் இல்லம் தேடி கல்வி மையங்கள்? தன்னார்வலர்கள் கவலை! - ILLAM THEDI KALVI Scheme