சென்னை:சென்னை திருவொற்றியூர் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை செல்லக்கூடிய மெட்ரோ ரயிலில் ஒரு இளைஞர் பயணிகள் முன்பே கஞ்சா பொட்டலங்களை பிரித்து புகைக்க சுருட்டியது போன்ற போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் புகைப்படத்துடன் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததால் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக கஞ்சா புகைக்க சுருட்டிய வாலிபரின் புகைப்படத்தை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தொடர்புடையது, தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த புவனேஷ்(24) என்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து இளைஞரைக் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில், இளைஞர் தேனாம்பேட்டையில் உணவு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதும், கடந்த 25ஆம் தேதி வழக்கம் போல வேலைக்குச் செல்வதற்காக தனது வீட்டிலிருந்து தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயில் ஏறி, அரசினர் தோட்டம் அருகே செல்லும் போது புவனேஷ் கஞ்சாவை புகைப்பதற்குப் பொட்டலத்தைப் பிரித்து ரோல் செய்ததும். அப்போது, அதனை சகபயணிகளில் ஒருவர் புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்ததும் தெரியவந்தது.