கோயம்புத்தூர்:நாடு முழுவதும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களைப் பயன்படுத்தி மின் சக்தியை உருவாக்கும் பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில், சில முயற்சிகள் வெற்றியடைந்து படிப்படியாக மக்களின் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், சோலார் பேனல்கள் அமைத்து சூரிய ஒளி மூலம் மின்சக்தியை உருவாக்கும் வழிமுறை தற்போது அதிகரித்து வருகிறது.
சோலார் பேனல்களை பொருத்தி மின்சக்தியை தயாரித்து பயன்படுத்துவது என்பது மின்சாரத்திற்கு ஆகும் செலவை விட குறைவானதாகும். சோலார் பேனல்களை பொருத்துவதன் மூலம் தேவைக்கேற்ப நாம் மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
உக்கடம் பெரியகுளத்தில் மிதக்கும் மின் திட்டம் (Credit - ETV Bharat Tamil Nadu) சோலார் பேனல்களை பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும். முன்னதாக சோலார் பேனல்களை வீடுகளின் மேற்கூரைகள், மின்கம்பங்கள் பேனல்கள் பொருத்துதல், கம்பெனிகளில் தரைதளத்தில் அமைத்தல் என இவ்வாறு அமைக்கப்பட்டு வந்தன.
தமிழ்நாட்டில் முதல்முறையாக கோயம்புத்தூர் மாநகராட்சியில், உக்கடம் பெரியகுளத்தில் சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் (அதாவது 50 சென்ட்) மிதக்கும் சோலார் பேனல்கள் மூலம் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணியானது ரூ.1.45 கோடியில் நடைபெற்று வருகிறது. இதற்காக 50 சதவீத பங்களிப்பாக, ரூ.72.50 லட்சத்தை சுவிட்சர்லாந்து தூதரகம் வழங்குகிறது. மீதமுள்ள, 72.50 லட்சம் ரூபாயை தமிழக அரசு வழங்குகிறது.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஜெர்மனி நாட்டு நிறுவனத்துடன் இணைந்து பெரியகுளத்துக்குள் சோலார் பேனல்களை மிதக்க விடும் பணிகளானது துவங்கியுள்ளது. ஆங்கரிங் முறையில் சோலார் பேனல்கள் மிதக்க விடப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் முதன் முறையாக தண்ணீரில் சோலார் பேனர்களை மிதக்கவிட்டு மின்சாரம் எடுக்கக்கூடிய பணி என்பதால், இதை விரைவாக செயல்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்பொழுது முதல் கட்ட பணிகள் துவங்கியுள்ள நிலையில், இரண்டு மாதங்களில் இது செயல்பாட்டிற்கு வரும் என மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :இலவச மின்சாரம் வேண்டுமா; ஒன்றிய அரசின் புதிய சோலார் திட்டத்திற்கு விண்ணப்பிக்கவும்!
இதுகுறித்து அவர் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், "கோயம்புத்தூர் மாநகராட்சியும், ஜெர்மன் நாட்டு நிறுவனமும் இணைந்து ரூ.1 கோடியே 45 லட்சம் செலவில், மின்சாரம் எடுக்க சோலார் பேனல்களை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 154 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்க முடியும்.
இரண்டு மாதத்தில் இந்த பணிகள் நிறைவடைந்து திட்டம் வெற்றியடையும் நிலையில் நகரில் உள்ள பிற குளங்களிலும் இந்த முறையில் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மின்வாரியத்திற்கு வழங்கும் வகையில் கட்டமைப்புகள் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த சோலார் பேனல்களை பாதுகாப்பதற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும், காவல் பணிக்கு ஆட்களை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. குளத்தில் தண்ணீர் குறையும் போது கீழே செல்லும் வகையிலும், அலையடித்தாலும் எந்த சேதமும் ஏற்படாத வகையிலும் சோலார் பேனல்களானது பொருத்தப்பட்டு வருகிறது.
இரண்டு மாதத்தில் பணிகள் நிறைவடைந்து செயல்பாட்டிற்கு வரும். நிலப் பகுதியில் செய்யக்கூடிய சோலார் மின் உற்பத்தி திட்டத்தை முதல்முறையாக நீரில் செய்துள்ளோம். நான் ஒன்றுக்கு 700 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய இருப்பதால் மாநகராட்சிக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
பல்வேறு மாநிலங்களில் இத்திட்டம் இருந்தாலும் தமிழ்நாட்டில் முதல்முறையாக இத்திட்டம் செயல்படுத்தப்படுவது பொதுமக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. நீர்நிலைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால் நீர் ஆவியாவது தடுக்கப்படுகிறது. 330 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ள நிலையில் வெறும் 50 சென்ட் அளவிற்கே சோலார் பேனல்கள் அமைக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இருக்காது" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Naduஈடிவி பாரத் தமிழ்நாடு) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்