சென்னை : 7 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில், சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மிஸ் யூ’. ரொமாண்டிக் பீல் குட் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தை ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற கமர்சியல் ஹிட் படங்களை இயக்கிய N. ராஜசேகர் இயக்கியுள்ளார்.
ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா குமார், ரமா, பாலசரவணன், 'லொள்ளு சபா' மாறன், சஸ்டிகா என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தபடத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
‘மிஸ் யூ’ திரைப்படம் வரும் நவ- 29ல் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. இந்தநிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
A youthful tale of love, laughter, and friendship that will resonate deep within 💌
— 7MPS-PRODUCTIONS (@7mpsProductions) November 23, 2024
Watch #MissYouTrailer now ▶️https://t.co/uuNKxmOPXI #MissYouFromNov29 #MissYouMovie#Siddharth @RedGiantMovies_ @7mpsProductions @cvsam @Dir_RajasekarN @AshikaRanganath pic.twitter.com/KxELM5kedo
இந்த விழாவில் நடிகர் சித்தார்த் பேசும்போது, "இந்த 2024ல் ஒரு விஷயத்தை வேகமாக பரவ வைக்க வேண்டும் என்றால் நெகட்டிவ்வாக சொன்னால் தான் தீ போல பரவுகிறது. செய்திகளுக்கு வைக்கப்படும் புகைப்படங்கள், டைட்டில்கள், நிகழ்ச்சியின் ஹைலைட்டுகள் எல்லாவற்றிலும் பெரும்பாலும் நெகட்டிவ் விஷயங்கள் தான் வேகமாக பரவுகிறது. அப்படி ஒரு விஷயத்தை தேட ஆரம்பித்தால் நமக்கே திடீரென ஏதோ ஒன்று மிஸ்ஸிங் ஆகிறது என தோன்றும்.
அதனால் நான் பாசிடிவையே தேடி போக வேண்டும். ‘மிஸ் யூ’ வெட்டு, குத்து, ரத்தம், வன்முறை, வன்மம் என எதுவுமே இல்லாத ஒரு பாசிட்டிவான ஃபீல் குட் படம். 90களில் விஜய் படங்களை தியேட்டரில் பார்த்து ரசித்த காலத்தில் எல்லா படத்திலும் பாடல்கள் நன்றாக இருக்கும்.
கலர்ஃபுல்லாக இருக்கும். நல்ல ஒரு பாசிட்டிவான சோசியல் கருத்தையோ, நகைச்சுவை கருத்தையோ, நட்பு, காதல் என நல்ல குணங்களை பற்றி உயர்த்திக் காட்டப்படுகின்ற வகையில் எடுக்கப்பட்ட கமர்சியல் படங்களை தான் நாங்கள் பார்த்து இங்கே வந்திருக்கிறோம்.
இந்த படத்தின் கதையை சொல்வதற்காக இயக்குனர் ராஜசேகர் வந்தபோது காதல் கதை என்றதுமே, தயவு செய்து வேண்டாம். பத்து வருடமாக அந்த பக்கமே நான் தலை வைத்து படுக்கவில்லை என்றேன். காரணம் தெலுங்கில் அதுபோல நிறைய பண்ணி வேறு எந்த படங்களும் எனக்கு வராமல் போய் எதற்கெடுத்தாலும் காதல் கதைகள் மட்டுமே வந்தது.
என்னால் அது மட்டும் தான் பண்ண முடியும் என்கிற ஒரு நெருக்கடிக்கு ஆளாக்கி விட்டார்கள். லெட்டர் கூட எழுதி வைக்காமல் அப்போது காதலை விட்டு ஓடி வந்தவன் தான். இன்னும் அந்த பக்கம் போகவே இல்லை. காதலில் சொதப்புவது எப்படி என்கின்ற படம் தான் நான் கடைசியாக நடித்த முழுக்க முழுக்க காமெடி ரொமான்ஸ் படம். அது கூட நான் முதலில் தயாரித்த படம் என்பதால். அதற்கு பிறகு வேறு எதுவும் பண்ணவில்லை.
இதையும் படிங்க : "பாய்ஸ் சித்தார்த்.. இன்னும் லவ் படங்கள்.." - சித்தார்த்தை கலாய்த்த கார்த்தி!
சரி கதை சொல்லுங்கள் எப்படியும் நோ தான் சொல்லப்போகிறேன் என்றேன். அவர் எடுத்ததுமே உலகத்திலேயே உங்களுக்கு பிடிக்காத ஒரு பெண்ணிடம் காதலை சொல்ல போகிறீர்கள் என்றார். இதை கேட்டதும் சரி என ஒப்புக் கொண்டாலும், அவரிடம் நீங்களும் நானும் பார்க்காத ஒரு காதல் படமாக இதை எடுப்போம். ஏற்கனவே அரைத்த மாவையே அரைக்க நாம் இருவருமே தேவையில்லையே என்று கூறிவிட்டேன். அப்படி எடுத்தால் தான் இந்த காலத்து பசங்க கிரிஞ்ச் என சொல்லாமல் இருப்பார்கள்.
கடந்த பத்து வருடங்களில் நிறைய லவ் படங்கள் ஜெயித்து இருக்கின்றன. அதனால் இதை எடுத்தோமா என்றால் இல்லை. இது கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம். காதல் கதைகளுக்கு காலம் தாண்டிய ஒரு வரவேற்பு இருந்து கொண்டே இருக்கும். எனக்கும் அது தெரியும்.
அடுத்து வரப்போகும் புதிய தலைமுறை இளைஞர்களுக்கு காதல் என்றால் என்ன, நாம் ரசித்த விஷயங்கள் என்ன என்பதை சரியாக புரிந்து கொள்ளும் விதமாக நாம் காட்ட வேண்டும். இது எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இருக்கும். ரியாலிட்டி சம்பந்தப்பட்ட விஷயமாகவும் அதே சமயம் சினிமாவுக்கான அழகு இரண்டுமே இதில் இருக்கும். அதனால் தான் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இந்த படத்தை தைரியமாக வெளியிட இருக்கிறார்கள்.
கார்த்தியை பற்றி இங்கே ஒரு விஷயம் சொல்ல வேண்டும். சர்தார் 2 நைட் ஷூட்டிங் வைத்துக் கொண்டு எனக்காக இப்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தான். மணிரத்னம் படத்தில் நாங்கள் இருந்த சூட்டிங் பாட்டில் நடந்த விஷயங்களை பற்றி சொன்னவன் ஒரு விஷயத்தை சொல்ல மறந்து விட்டான்.
அப்போது நான் கார்த்தியிடம் நீயும் என்னை போல ஒரு நடிகனாகத்தானே ஆகப்போகிறாய் என்று கேட்டேன். ஆனால் அதற்கு கார்த்தி நானெல்லாம் உன்னை மாதிரி இல்ல மச்சி, நான் டைரக்சனில் தான் Focus-ஆக இருக்கிறேன். நான் பண்ணினால் டைரக்சன் தான் என்று சொன்னான். ஆனால் கொஞ்ச நாளிலேயே பருத்தி வீரன் பட அறிவிப்பு வருகிறது. அப்போது நான் போன் பண்ணினால் எடுக்கவே பயந்தான். அதன் பிறகு ஏதோ சொல்லி சமாளித்தான். இந்த நட்பு இப்போது வரை தொடர்கிறது.
நான் சமீப காலத்தில் பார்த்த ரொம்ப ரொம்ப பாசிட்டிவான படம் ‘மெய்யழகன்’. அந்த மாதிரி ஒரு படத்தை ஒப்புக்கொண்டு கமர்சியல் ஹீரோவான கார்த்தி அதில் நடித்து வெளிவந்தது உண்மையிலேயே ஹேட்ஸ் ஆப் கார்த்தி. படம் பார்த்துவிட்டு நீண்ட நேரம் அழுதபடி கார்த்தியிடம் உணர்ச்சிகளை கொட்டினேன். அதை கார்த்தியும் ரொம்பவே ரசித்து கேட்டான்.
இந்த படத்தின் டிரெய்லரை கார்த்தி வெளியிடுவதன் மூலம் ரசிகர்களிடம் ஒரு பாசிட்டிவான அதிர்வுகளை கொண்டு செல்ல முடியும் என்பதால் தான் இதை ‘மெய்யழகன்’ தான் வெளியிட வேண்டும் என அழைத்தேன். சித்தா என்கிற படத்தை நான் எடுத்து முடித்து பொதுமக்களின் ஆதரவுடன் வெற்றி படமாக அமைந்தது" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்