ஐதராபாத்: 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாளில் பல முன்னணி வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போய் வரலாறு படைத்தனர். அப்படி அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 27 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார். அவரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஆர்டிஎம் கார்டு மூலம் ரிஷப் பன்ட்டை தக்க வைக்க டெல்லி கேபிட்டல்ஸ் அணி திட்டமிட்ட நிலையில், இறுதியில் லக்னோ அணி தடாலடியாக 27 கோடி ரூபாய் என அறிவித்து ரிஷப் பன்ட்டை ஏலத்தில் எடுத்தது.
அவரைத் தொடர்ந்து மற்றொரு இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 26 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 18 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்தார். ஆரம்பத் தொகையான 2 கோடி ரூபாயில் களமிறங்கிய அவரை நீண்ட போராட்டத்திற்கு பின்னர் பஞ்சாப் அணி கைப்பற்றியது.
கடந்த ஐபிஎல் சீசனில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக 24 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு ஏலம் போன நிலையில், இந்த முறை அந்த சாதனையை ரிஷப் பன்ட் மற்றும் கே.எல் ராகுல் முறியடித்து புது வரலாறு படைத்தனர். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 18 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியில் இணைந்தார். அவரை ஆர்டிஎம் கார்டு மூலம் பஞ்சாப் அணி தக்கவைத்துக் கொண்டது.
தொடர்ந்து தென் ஆப்பிரிக்க வீரர் கஜிசோ ரபாடா 10.75 கோடி ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணி விலைக்கு வாங்கியது. அவரைத் தொடர்ந்து ஜாஸ் பட்லர் 15.75 கோடி ரூபாய்க்கு குஜராத் அணியில் இணைந்தார். சுழற் பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 18 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது.
முகமது ஷமி 10 கோடி ரூபாய் தொகைக்கு சன்ரைசஸ் ஐதராபாத் அணி வாங்கியது. அதேபோல் முகமது சிராஜ் 12.25 கோடி ரூபாய் தொகைக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்தார். விக்கெட் கீப்பர் கே.எல் ராகுல் 14 கோடி ரூபாய்க்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் ஐக்கியமானார். கடந்த முறை அதிக தொகைக்கு ஏலம் போன மிட்செல் ஸ்டார்க் இந்த முறை 11.75 கோடி ரூபாய்க்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணியால் விலைக்கு வாங்கப்பட்டார்.
இதையும் படிங்க: IPL 2025 Auction Live: யார் இந்த வெங்கடேஷ் ஐயர்?