சென்னை: சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்ட விமானம் நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டு மீண்டும் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்றது. இதனால் இன்று காலை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று (டிச.26) காலை 8.40 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து 107 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 113 பேருடன் புறப்பட்டு சென்றது.
அப்போது வானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து விமானம் தொடர்ந்து பறப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்த விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விமானத்தை உடனடியாக சென்னைக்கு திருப்பிக் கொண்டு வந்து அவசரமாக தரையிறக்கும்படி அறிவுறுத்தினர். மேலும், சென்னை விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக செய்யப்பட்டன.