தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

100 வருடங்கள் வரை காய்க்கும் அரேபிய பேரிச்சை.. தருமபுரியில் அசத்தும் விவசாயி! - Dates Cultivated In Dharmapuri - DATES CULTIVATED IN DHARMAPURI

Arab Countries Dates Cultivated In Dharmapuri: தருமபுரி மாவட்டத்தில் வறட்சியை தாங்கும் பணப் பயிரான அரேபிய பேரிச்சையை சாகுபடி செய்து அமோக விளைச்சலை பெற்றதோடு நல்ல லாபத்தை சம்பாதிக்கும் சாதனை விவசாயி குறித்த சிறப்பு தொகுப்பு.

பேரீச்சை பண்ணை
பேரிச்சை பண்ணை (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 28, 2024, 9:03 PM IST

தருமபுரி: ஈராக், சவுதி அரேபியா போன்ற பாலைவன நாடுகளில் மட்டுமே பயிரிடப்பட்டு வரும் பேரிச்சை சாகுபடியை தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரியகுளம் கிராமத்தைச் சேர்ந்த நிஜாமுதீன் என்ற விவசாயி அரேபிய பேரிச்சையை பயிரிட்டு அமோக விளைச்சலை பெற்றுள்ளார்.

தருமபுரி அரேபிய பேரிச்சை குறித்த செய்தி தொகுப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

சவுதி அரேபியாவில் பேரிச்சை பண்ணையில் பணிபுரிந்து வந்த நிஜாமுதீன், பாலைவன நாடுகளில் பயிராகும் இந்த பேரிச்சை விவசாயத்தை ஏன் தனது சொந்த கிராமத்தில் செய்யக் கூடாது என சிந்தித்து, சோதனை அடிப்படையில் வெளி நாடுகளில் இருந்து திசுவளர்ப்பு பேரிச்சை கன்றுகளை இறக்குமதி செய்து தனது நிலத்தில் பயிரிட்டுள்ளார்.

சில ஆண்டுகளிலேயே நல்ல விளைச்சலை தந்த இந்த பயிரை, தொடர்ந்து தனது நிலத்தில் பயிரிட்டு, தற்போது சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் பேரிச்சை சாகுபடி செய்து வருகிறார். இங்குள்ள நிலத்தில் பர்ரி, மஸ்தூர், அம்மர், நூர் உள்ளிட்ட 35 வகையாக பேரிச்சை செடிகளை தற்போது பயிரிட்டுள்ளார். அதில் பர்ரி என்ற திசு வளர்ப்பு செடி தருமபுரியின் வறட்சியையும் கடந்து நல்ல விளைச்சலை தந்துள்ளது. அதேபோல், நூர் என்ற ரகம் நல்ல சுவையுடனும் இருந்து வருகிறது.

இந்த அரேபிய பேரிச்சையை சாகுபடி குறித்து விவசாயி நிஜாமுதீன் ஈடிவி பாரத் செய்திகளிடம் கூறுகையில், "இந்த பேரிச்சை விவசாயம் விவசாயிகளுக்கு ஒரு நல்ல வரப்பிரசாதமாகும். இதை பயிரிட்டால் 3 ஆண்டுகளில் நல்ல மகசூலை பெறுவதோடு விவசாயிகளுக்கு நல்ல லாபத்தைக் கொடுக்கும்.

பேரிச்சை விவசாயத்திற்கு வேலையாட்கள், தண்ணீர் போன்றவை அதிகம் தேவைப்படாத ஒரு பணப்பயிராகும். இதற்கான பராமரிப்புச் செலவும் குறைவுதான். பேரிச்சை பழம் 1 கிலோ 250 ரூபாயில் இருந்து 600 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனை மொத்த வியாபாரிகள் நேரடியாக பேரிச்சை பண்ணைக்கே வந்து வாங்கிச் செல்கின்றனர்.

மேலும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் பழங்களை வாங்கி ஏற்றுமதி செய்கின்றனர். இங்கிருந்து சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற வெளிநாடுகளுக்கு விமானம் மூலமாக விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. ஒரு கிலோ 100 ரூபாய்க்கு கொடுத்தாலே விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்" என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ச்சியாக பேசிய அவர், "இந்த மரங்கள் 100 வருடங்கள் வரை நல்ல காய்க்கும் தன்மை கொண்டது. ஆகவே, மற்ற விவசாயிகளும் பேரிச்சை சாகுபடி செய்ய வேண்டும் என்ற நோக்கில் வெளிநாடுகளில் ஆய்வுக் கூடங்களில் சுமார் 3 வருடங்கள் சோதனை செய்து வளர்க்கப்படும் செடிகளை எனது தோட்டத்தில் வளர்த்து கன்றுகளாக விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம்.

இந்த மகசூலைக் கண்டு வெளி மாவட்ட விவசாயிகள் நேரில் வந்து, பேரிச்சை மரங்களைப் பார்த்து தங்களது நிலத்தில் வைப்பதற்காக செடிகளை வாங்கிச் செல்கின்றனர். பேரிச்சை, தோட்டக்கலைத் துறையில் இணைக்கப்பட்டுள்ளதால் இதற்கு அரசு மானியமும், வங்கிக் கடனும் வழங்கப்படுகிறது.

மேலும், கடும் வறட்சியின் காரணமாக விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விவசாயம் செய்ய இயலாமல், பிழைப்பு தேடி அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் இந்த சூழ்நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் வகையில் பேரிச்சை சாகுபடி செய்யலாம்.

அதேபோல் போதிய மழை இல்லாமல் பல்வேறு பகுதிகளை சாகுபடி செய்து வருவாய் இல்லாமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையில், பேரிச்சை குறைந்த செலவில் அதிக வருவாய் கிடைக்கும் பயிராக இருக்கும்" என்று கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு ஒரே மழை தான்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details