சென்னை: சென்னை தி.நகர் துரைசாமி சாலையில் உள்ள நகைக்கடைக்கு நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) நகை வாங்குவது போல் வந்த இளைஞர் ஒருவர், இரண்டு சவரன் மதிப்பிலான மோதிரத்தை திருடிச் சென்றுள்ளார். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு திருடனை அடையாளம் கண்ட நகைக்கடை நிர்வாகத்தினர், காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருந்தனர்.
இந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) அதே நகைக் கடையின் உஸ்மான் சாலையில் உள்ள மற்றொரு கிளைக்கு இந்த இளைஞர் சென்றுள்ளார். அப்போது அவரை பிடித்த நகைக்கடை ஊழியர்கள், மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பின்னர் மாம்பலம் போலீசார் பிடிபட்ட இளைஞரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில், பிடிபட்ட இளைஞர் சிட்லபாக்கத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பதும், பிசிஏ (BCA) பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவதும் தெரிய வந்துள்ளது. மேலும், தி.நகர் பகுதியில் உள்ள நகைக்கடையில் திருடிய இரண்டு சவரன் மோதிரத்தை பல்லாவரத்தில் ஒரு அடகுக் கடையில் வைத்து பணம் வாங்கி செலவு செய்ததும் தெரிய வந்துள்ளது.