மதுரை:மதுரை பந்தடி பகுதியைச் சேர்ந்தவர் துவாரக நாத். இவர் தனது மனைவி மஞ்சுளாவோடு, கடந்த 20ம் தேதி கடைகளுக்குச் சென்று புத்தாடைகள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்து இவரது மனைவி மஞ்சுளா கீழே இறங்கும்போது இவர்களைப் பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்மநபர்கள் மஞ்சுளா கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க செயினை பறிக்க முற்பட்டனர். அப்போது சுதாரித்துக் கொண்ட மஞ்சுளா தங்க செயினை இறுக்கமாக பிடித்துக்கொண்டதால், மர்ம நபர்கள் செயினோடு சேர்த்து மஞ்சுளாவையும் தரதரவென இழுத்து சென்றனர்.
இதனால் பாதி செயின் மஞ்சுளா கையிலும், பாதி செயின் மர்மநபர்கள் கையிலும் சிக்கி உள்ளது. தற்போது இந்த காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக இரு மர்மநபர்கள் மீதும் தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.