மதுரை:மதுரையைச் சேர்ந்த பாலகணேஷ் என்பர் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வனச் சரகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வனப்பகுதியில் கண்ணிவெடி மறைத்து வைத்து புள்ளிமான்களை வேட்டையாடியதாக என் மீதும், என் நண்பர்கள் மீது வனவிலங்குகள் பாதுகாப்பு மற்றும் ஆயுத சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
மேலும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி எனது சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், இந்த சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் 15 நாட்களுக்குப் பின்தான் வீட்டில் வைத்து என்னைக் கைது செய்தனர். இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட எனது சொகுசு காரை மீண்டும் ஒப்படைக்கக்கோரிக் கேட்ட போது, அதற்கு வனத்துறையினர் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, பறிமுதல் செய்த என்னுடைய சொகுசு காரை திரும்பி என்னிடம் ஒப்படைக்கக் கோரி உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தேன். ஆகவே, புள்ளிமான் வேட்டையில் ஈடுபட்டதாக வனத்துறையினர் பறிமுதல் செய்த என்னுடைய சொகுசு காரை திரும்பி என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.