சென்னை: தமிழகத்தில் கழுகுகள் அதிகமாக உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள விலங்குகளுக்கு NIMUSLIDE, FLUNIXIN மற்றும் CARPROFEN ஆகிய மருந்துகளைச் சட்டவிரோதமாகச் செலுத்துவதாகவும், மருந்து செலுத்தப்பட்ட அந்த விலங்குகள் உயிரிழந்த பிறகு, அவற்றின் மாமிசத்தைச் சாப்பிடும் கழுகுகள் அதிகளவில் உயிரிழப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
ஆகவே, சம்மந்தப்பட்ட நான்கு மாவட்டங்களிலும் மூன்று மருந்துகளையும் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்க வேண்டுமெனக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரும், வன விலங்குகள் ஆர்வலருமான சூர்யகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "1980ஆம் ஆண்டில் இந்தியாவில் நான்கு கோடி கழுகுகள் இருந்த நிலையில் தற்போது 19,000 கழுகுகள் மட்டுமே இருப்பதாகவும், இயற்கையின் சுகாதார பணியாளர்களான கழுகுகளைப் பாதுகாக்க, நான்கு மாவட்டங்களிலும் கழுகுகள் பாதுகாப்பு மையங்கள் அமைக்க வேண்டும்" எனக் கோரப்பட்டிருந்தது.