மதுரை: தஞ்சாவூரைச் சேர்ந்த நட்சத்திர ராஜ், புதுக்கோட்டையைச் சேர்ந்த பாலாஜி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில், "அரசுப் போக்குவரத்துக்குக் கழகத்தில் ஓட்டுநர்களாக பணியில் உள்ளோம். பணியின் போது, எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து தொடர்புடைய போலீசார் வழக்குப் பதிவு செய்து எங்களுடைய ஓட்டுநர் உரிமத்தைப் பறிமுதல் செய்து, வட்டாரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு அனுப்பினர். வட்டார போக்குவரத்து அலுவலர்கள் விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர்களின் உரிமத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.
உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் எங்களது ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. எனவே, வட்டார போக்குவரத்து அலுவலரின் உத்தரவை ரத்து செய்து, எங்களிடம் ஓட்டுநர் உரிமத்தைத் திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், "ஓட்டுநர்களாகப் பணியில் இருந்தபோது, விபத்துக்கள் ஏற்பட்டதால், மனுதாரர்கள் மீது அலட்சியத்தால் மரணம் விளைவித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை.
சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பும், எந்தவிதமான ஆதாரங்கள் இல்லாமல், குற்றத்தின் மீது முடிவெடுக்க. வட்டார போக்குவரத்து அதிகாரி, நீதிபதியாகச் செயல்பட முடியாது. எனவே, உரிமத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து அரசு வழக்கறிஞர் தரப்பில், "அடையாளம் காணக்கூடிய குற்றங்கள் ஏதும் இழைக்கப்பட்டால், மத்திய மோட்டார் வாகன விதி 21-ல் உள்ள மோட்டார் வாகனச் சட்டம், 1981-ன் பிரிவு 19-ன் படி, மனுதாரர்களின் பதிலுடன் குறிப்பிடப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு நியாயமான வாய்ப்பை வழங்கிய பிறகு, ஓட்டுநர் உரிமத்தை இடைநிறுத்த அதிகாரம் உள்ளது. எனவே, ஓட்டுநர் உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவுகளில் தலையிட எந்த காரணமும் இல்லை" என வாதிடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நீதிபதி, "வட்டார போக்குவரத்து அலுவலருக்கு அதிகாரம் உள்ளது. உரிய வாய்ப்பு வழங்கி மோட்டார் வாகன சட்டப்படி ஓட்டுநர் உரிமத்தை இடைநிறுத்தி வைக்கலாம். ஆனால் வழக்குப் பதிவான நேரத்திலேயே மோட்டார் வாகன சட்டப்படி, பிரிவு 19-இன் கீழ் நடவடிக்கை எடுக்க உரிமத்தைப் பறிமுதல் செய்வது கட்டாயமில்லை என்று நீதிமன்றம் கருதுகிறது.
எனவே, எஃப்.ஐ.ஆர் அடிப்படையில் மட்டுமே குறிப்பாக மற்ற ஐபிசி குற்றங்களில் பதிவு செய்யப்பட்டால், உரிமத்தைப் பறிமுதல் செய்ய காவல்துறை அதிகாரிக்கு அதிகாரம் இல்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. விபத்தை நடந்துள்ளது என்பதற்காக எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட நிலையில், ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்து தற்காலிகமாக நிறுத்தி வைத்தது சட்டத்தின் பார்வையில் செல்லாது.
ஆகவே மனுதாரர்களின் ஓட்டுநர் உரிமத்தை ஒரு வாரத்திற்குள் திருப்பி ஒப்படைக்க வேண்டும். இந்த நீதிமன்றமானது, பிரதிவாதி காவல்துறை ஓட்டுநர் உரிமத்தைப் பறிமுதல் செய்ய முடியாது என்று கருதுகிறது. மனுதாரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட குற்றவியல் வழக்குகளில், விசாரணை நடைபெறும் நீதிமன்றத்தில் காவல்துறையின் இறுதி அறிக்கை தாக்கல் செய்த பிறகு மோட்டார் வாகன சட்டப்படி வட்டார போக்குவரத்து அலுவலர் ஓட்டுநர் உரிமத்தை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கலாம்" என உத்தரவிட்டு மனுக்களை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க:"தமிழகத்தில் சட்டம் இருக்கிறது. ஆனால், ஒழுங்காக இல்லை" - சீமான் குற்றச்சாட்டு..!