கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டத்தில், கிணத்துக்கடவு வழியாக கோவை - பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை செல்கிறது. இந்த சாலையில் கிணத்துக்கடவு பகுதியில் 2.5 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில், இன்று (மார்ச் 2) இரவு உடுமலையிலிருந்து ஒரு ஆம்புலன்ஸ் கோவை மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்துச் சென்று விட்டு, மீண்டும் உடுமலைக்கு திரும்பிக் கொண்டிருந்தது.
இந்த ஆம்புலன்ஸை ஆலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (22) என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், ஆம்புலன்ஸ் கிணத்துக்கடவு மேம்பாலத்தில் ஏறியபோது, அந்த பகுதியில் இருசக்கர வாகனத்திலிருந்து ஒரு நபர் தவறி கீழே விழுந்ததைக் கண்ட ஆம்புலன்ஸ் டிரைவர், பின்னோக்கி வந்து அந்த நபரை மீட்க வந்துள்ளார்.
அப்போது, கோகுல் (28) என்பவர் ஓட்டி வந்த பேட்டரி கார், எதிர்பாராத விதமாக ஆம்புலன்ஸின் பின்பக்கம் பலமாக மோதியது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸும், பேட்டரி காரும் மேம்பாலத்தில் தூக்கி வீசப்பட்டது. இதில், ஆம்புலன்சில் உள்ள பெட்ரோல் டேங்க் உடைந்து கீழே சிந்தியதால். ஆம்புலன்ஸ் முழுவதும் தீப்பிடித்து மளமளவென எரியத் தொடங்கியது.