தூத்துக்குடி:மாவட்டம் பேரூரணியை சேர்ந்தவர் அன்னராஜ். இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில், வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அன்னதங்கம் (47). 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
இந்த நிலையில், நேற்று வழக்கம் போல, அன்னதங்கம் 100 நாள் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது பலத்த காற்றுடன், இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது. இதனால் பணியை நிறுத்தி விட்டு உடன் பணியாற்றும் அனைவரும் வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது ஊர் அருகில் உள்ள "வாழவந்த அம்மன்" கோவில் முன்புள்ள அத்திமரத்தை தாண்டி செல்லும் போது எதிர்பாராத விதமாக மரத்தை தாக்கிய மின்னல், அன்னதங்கம் மீதும் பாய்ந்துள்ளது.
இதையும் படிங்க:இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளம்பெண்.. நண்பர்கள் உடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை.. சென்னையில் அதிர்ச்சி!
இதனால், அன்னதாங்கம் அதே இடத்தில் உடல் கருகி பரிதாபமாக பலியானர். பின்னர், அவருடன் வந்த பெண்கள் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தனர். இதனை கண்ட கிராமத்தினர் ஒடி வந்து பார்த்த போது, அன்னதங்கம் இறந்து கிடப்பதை கண்டு மேலும் மயக்கம் அடைந்தவர்களை மீட்டனர். அன்னதங்கத்தின் வீட்டாருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவரது உறவினர்கள் கதறி அழுத நிகழ்வு காண்போரை கண்கலங்க வைத்தது.
தொடர்ந்து கிராமத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில், தட்டப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மின்னல் தாக்கி உயிரிழந்த அன்னதங்கத்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
100 நாள் வேலைக்கு சென்ற பெண்மணி மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் கிராமத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்