தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேரனுக்கு போட்டியாக ஜிம்முக்கு போன பாட்டி:பளு தூக்கும் போட்டியில் சாதனை! - Weight Lifter Kittammal Patti - WEIGHT LIFTER KITTAMMAL PATTI

Weight Lifter Kittammal Patti: 82 வயதிலும் மனம் தளராமல், திறமைக்கு வயது தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் பங்கேற்று, வெற்றி பெற்ற பாட்டி கிட்டம்மாளுக்கு, சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பளுதூக்கும் பாட்டி கிட்டம்மாள்
பளுதூக்கும் பாட்டி கிட்டம்மாள் (Credits - Etv Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 9, 2024, 6:48 PM IST

பளு தூக்கும் போட்டியில் சாதனை படைத்த கிட்டம்மாள் (Credit: ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: “என் பேரனைப் பார்த்துதான் ஜிம் போகும் ஆர்வம் வந்தது. எந்த துறையானாலும் எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என எண்ணினேன்” என்கிறார் 82 வயதில் பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு சாதனை புரிந்த பாட்டி கிட்டம்மாள். கதை சொல்லும் பாட்டிகளை பார்த்திருப்போம். ஆனால் இந்த பாட்டியின் கதை தூக்கும் ஆர்வத்தைக் கண்டு வியந்த பயிற்சியாளர், கிட்டம்மாளுக்கு சில அடிப்படையான பயிற்சிகளை அளித்து தயார் படுத்தியுள்ளார்.

கோவையில் "Indian fitness federation" சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிக்கு சென்றுள்ளார். பெண்களுக்கான பளு தூக்கும் பிரிவில் பங்கேற்ற பாட்டி கிட்டம்மாள் 50 கிலோ எடையை அசால்ட்டாக தூக்கி முதல் முயற்சியிலேயே ஐந்தாம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.

பாட்டி கிட்டம்மாள்: கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி முத்து கவுண்டர் அவன்யூவில் வசித்து வரும் வெங்கட்ராமன் என்பவரின் மனைவி கிட்டம்மாள். இவரது மகள் தேவி மற்றும் பேரன்கள் ரித்திக், ரோஹித் ஆகியோர் பல்லடம் மகாலட்சுமி அவன்யூவில் வசித்து வருகின்றனர். ரோகித் மற்றும் ரித்திக் ஆகியோர் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ள நிலையில், வார இறுதி நாட்களில் பாட்டி கிட்டம்மாள் பல்லடத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வரும் போது தனது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை கண்டு தானும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஆசைபட்டுள்ளார்.

பளு தூக்குவதில் ஆர்வம்:அதன் பின், இரண்டு பேரன்களின் உதவியால் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் தொடர்ச்சியாக உடற்பயிற்சி மேற்கொண்டு, பேரன்களோடு உடற்பயிற்சி கூடத்திற்கும் சென்றுள்ளார். அங்கு 25 நாட்கள் பளு தூக்கும் பயிற்சி மேற்கொண்டுள்ளார். பாட்டியின் ஆர்வத்தைக் கண்டு வியந்த உடற்பயிற்சியாளர் சதீஷ், பாட்டியை கடந்த மே 1ஆம் தேதி ‘இந்தியன் ஃபிட்னஸ் பெடரேசன்’ (Indian fitness federation) சார்பில் கோயம்புத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான பளு தூக்கும் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பளு தூக்கும் போட்டியில் சாதனை:அந்த போட்டியில் பெண்களுக்கான பளு தூக்கும் பிரிவில் பங்கேற்ற 82 வயதான பாட்டி கிட்டம்மாள், 50 கிலோ எடையை அசால்ட்டாக தூக்கி முதல் முயற்சியிலேயே ஐந்தாம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார். மேலும் ‘தென்னியாவின் வலிமையான மனிதர் 2024’ (Strong man of South india -2024) என்ற பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளார்.

எனது ஆரோக்கியத்திற்கு உணவுமுறையே காரணம்: இது குறித்து பாட்டி கிட்டம்மாள் ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திடம் அளித்த சிறப்பு பேட்டியில், “எனக்கு 82 வயதாகிறது. எனது பேரன் பளுதூக்கும் வீரர். அவரைப்பார்த்து எனக்கும் பளு தூக்க வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என ஆசையும் வந்தது. நானும் என் பேரனோடு உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்தேன், பளு தூக்கினேன்.

உடற்பயிற்சியாளர் என்னை கோயம்புத்தூரில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டிக்கு அழைத்து சென்றார். அங்கு 50 கிலோ எடையை தூக்கி வெற்றி பெற்றேன். என்னை போல் வயதானவர்கள் கம்பீரமாக எதற்கும் துணிந்து நிற்கனும். ராகி கூழ், கம்மங்கூழ், சத்துமாவு கஞ்சி, காய்கறி சூப், கீரை சூப், முட்டை, பேரிச்சம்பழம், பாதாம் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்கிறேன். எனது ஆரோக்கியத்திற்கு எனது உணவுமுறை தான் காரணம்.

எந்த நோய், நொடியும் இல்லை:இது வரை எனக்கு எந்த நோயும் இல்லை. நீரிழிவு நோயோ, இரத்த அழுத்தமோ எந்த பிரச்சினையும் இல்லை. ஆரோக்கியமாக இருக்கிறேன்” என்று கூறினார். 82 வயதிலும் பளு தூக்கும் போட்டியில் பங்கேற்று, வெற்றி பெற்ற பாட்டி கிட்டம்மாளுக்கு, சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

வயது முதிர்வில் பளு தூக்குதல் - மருத்துவர் கருத்து:

82 வயதில் அதிகப்படியான எடையை தூக்குவது பாதிப்பை ஏற்படுத்துமா? இல்லையா? என பிசியோதெரபி ஆலோசகர் முனைவர் ஹரிஹரசுதனிடம் கேட்ட போது, “82 வயதான பாட்டி 50 கிலோ எடையை தூக்கி சாதனை புரிந்ததற்கு என்னுடைய பாராட்டுக்கள். பொதுவாகவே, வயதாக வயதாக நமது உடலின் தசை மண்டலமும், எலும்பு மண்டலமும் வலுவிழக்கும். முதியோருக்கு சார்க்கோபீனியா எனப்படும் தசை பலவீனமும் ஏற்படும். இந்த நிலையில், 82 வயதான முதியவர் முறையான பயிற்சியின்றி, அதிகப்படியான பளுவை தூக்கினால், எலும்பு முறிவு, எலும்பு விலகுதல், தசை இழப்பு போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது.

82 வயதில் ஒரு பெண், 50 கிலோ பளுவை தூக்கி அசத்தியது இளைஞர்களுக்கும், முதியோருக்கும் ஊக்கத்தை அளிக்கலாம். ஆனால் அந்த வீடியோவை பார்த்துவிட்டு, அதில் இருப்பது போல் யாரும், பளு தூக்க முயற்சிக்கக்கூடாது. ஆகவே இது போன்ற செயல்பாடுகள் மற்றும் உடற்பயிற்சிகளை பிசியோதெரபிஸ்ட், பயிற்சியாளர் முன்னிலையில் மேற்கொள்வது அவசியம்” என்றும் கூறினார்.

Dr. ஹரிஹர சுதன். பிசியோதெரபிஸ்ட், கோயம்புத்தூர் (Credit: ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க:மாங்கனி நகருக்கே மாம்பழம் வரத்து குறைவு.. கிடுகிடுவென ஏறிய விலை உயர்வால் வியாபாரம் மந்தம்! - Mango Price Today

ABOUT THE AUTHOR

...view details