சென்னை: பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு 8,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், '' பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக வருகிற 25.12.2024 அன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் தேவாலயங்களுக்கு (Churches) செல்வதால், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும், கூட்ட நெரிசல் ஏற்படாத வண்ணமும், இன்று (24.12.2024) இரவு முதல் நாளை (25.12.2024) வரை காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் என 8,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை பணிக்கு உதவியாக, ஊர்க்காவல் படையினரும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, 24.12.2024 அன்று இரவு முதல் பொதுமக்கள் தேவாலயங்களுக்கு (Churches) சென்று சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்வதால், 24.12.2024 அன்று இரவு முதல் 25.12.2024 வரை சென்னையிலுள்ள சுமார் 350 தேவாலயங்களுக்கு சுழற்சி முறையில் காவல் அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் கண்காணிக்கவும், விரிவான பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மயிலாப்பூர் சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயம், பாரிமுனை அந்தோணியர் தேவாலயம், அண்ணாசாலை புனித ஜார்ஜ் (கத்தீட்ரல்), தேவாலயம், சைதாப்பேட்டை சின்னமலை தேவாலயம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவு கூடும் தேவாலயங்களுக்கு கூடுதலாக சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து காவல் ஆளிநர்கள் நியமிக்கப்பட்டு, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீர்படுத்தும் பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகளவு கூடும் தேவாலயங்களின் அருகில் காவல் குழுவினர் மூலம் ஒலி பெருக்கியில் (Public Address system) பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்தும் கூட்ட நெரிசல் ஏற்படாத வண்ணமும் அறிவுறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சட்டம் & ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, அனைத்து மகளிர் காவல் நிலையம், சிறப்பு பிரிவுகள் மற்றும் சுற்றுக்காவல் வாகன காவல் குழுவினர் தொடர்ந்து ரோந்து சுற்றி வரவும், கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்ற நபர்கள் பிக்பாக்கெட், திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடாதவாறு கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது தவிர சிசிடிவி கேமராக்கள், டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.