சென்னை:தமிழ்நாட்டில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வெவ்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்குச் சமீப காலமாக போதைப் பொருட்கள் கடத்தி வந்து விற்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மடிப்பாக்கம் உதவி காவல் ஆணையர் தனிப்படைக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், வேளச்சேரி அருகே உள்ள நேதாஜி தெருவில் அமைந்துள்ள அஷ்டலட்சுமி நகரில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அஷ்டலட்சுமி நகரில் சந்தேகப்படும்படியான 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கிப் பிடித்து, அவர்களிடம் சோதனை நடத்தியுள்ளனர். இதில், அந்த கும்பலிடம் இருந்து ஆறு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து கடத்தி வந்த கும்பலைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த முதற்கட்ட விசாரணையில், அவர்கள், ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த பவித்திரன் (25), அனகாபுத்துாரைச் சேர்ந்த தீபக் (23), தரமணி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (22), வேளச்சேரியைச் சேர்ந்த ஜெயராஜ் (21) மற்றும் குன்றத்துாரைச் சேர்ந்த சார்லஸ் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும், இவர்கள் கடந்த 10ஆம் தேதி ஒடிசா மாநிலம் புனவேஸ்வருக்கு சென்று ஆறு கிலோ கஞ்சா வாங்கிக் கொண்டு, 13ஆம் தேதி சென்னை திரும்பினர். திருவொற்றியூர் இறங்கிய அவர்கள், அனகாபுத்துாரைச் சேர்ந்த பாலாஜி (28) என்பவரை அழைத்துக்கொண்டு ஆட்டோ வாயிலாக வேளச்சேரி வந்தபோது பிடிபட்டது தெரியவந்தது.
இதுமட்டும் அல்லாது, இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக அனகாபுத்துாரைச் சேர்ந்த பிரசாந்த் (21), பாலாஜி (18), வேளச்சேரியைச் சேர்ந்த கார்வேந்தன் (18) மற்றும் மதுராந்தகத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (18) உள்ளிட்ட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:போக்குவரத்து போலீசாரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபருக்கு தர்ம அடி!