கோயம்புத்தூர்:கோவை- அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் (ICT) 57வது பதிப்பு மாநாடு நடைபெற்றது. மெகா தொழில் நிறுவனத் தொடர்பு நிகழ்வாக நடைபெற்ற இந்த மாநாடு, தமிழ்நாடு தி குளோபல் ஸ்கில் கேப்பிட்டல் என்ற கருப்பொருளில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த மாநாடு தமிழ்நாட்டை உலகளாவிய மையமாக மாற்றுவதற்கான பாடத்திட்டத்தைப் பட்டியலிடும் நோக்கத்துடன் கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் கல்வியாளர்களின் ஒருங்கிணைப்பாக நடைபெற்றது. இதில் பல்வேறு கல்வி நிறுவனங்களை சார்ந்த தலைவர்கள், நிர்வாகிகள், தொழில்துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இந்த மாநாடு சிறப்புமிக்க மாநாடு எனவும், இந்த மாநாட்டின் கருப்பொருள் முதலமைச்சரின் அறிக்கையை எதிரொலிப்பதாகவும் தெரிவித்தார். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஏற்கனவே அனைத்து துறைகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறினார்.