கோபாலக் கிருஷ்ணன் மேம்பாட்டு மைய தலைமை செயல் அதிகாரி ரகோத்தம ராவ் பேட்டி சென்னை:ஐஐடி மாணவர்களின் கண்டுபிடிப்புகளை, ஆராய்ச்சி அளவில் இருக்கக் கூடிய திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வருவது குறித்த கருத்தரங்கு, மாணவர்களின் கண்டுபிடிப்புகள் குறித்த கண்காட்சி ஆகியவை சென்னை ஐஐடியின் ஐசிஎஸ்ஆர் வளாகத்தில் இன்று (ஜன.24) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் அபய் கண்டிகர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும்போது, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாற வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது .
அத்தகைய வளர்ச்சிக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பங்கு கணிசமாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்ப பல்வேறு செயல்பாடுகள் நடந்து வருகிறது. அறிவியல் ஆராய்ச்சி மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பிரதமர் மோடி அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். இதற்காகத் தனியாக ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்காகச் செலவிடப்பட உள்ளது.
முதல் கட்டமாக தற்போது வரை 14,000 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. கிரீன் ஹைட்ரஜன், செமி கன்டக்டர் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான துறைகளில் ஆராய்ச்சி திட்டங்களை வைத்திருப்பவர்களும், தொழில் முனைவோர்களும் மத்திய அரசை அணுகினால், அவர்களுக்கு போதிய ஆதரவையும், ஊக்கத்தையும் அளிப்பதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது” என தெரிவித்தார்.
கோபாலக் கிருஷ்ணன் மேம்பாட்டு மையத்தின் தலைமை செயல் அதிகாரி ரகோத்தம ராவ் கூறும்போது, “சென்னை ஐஐடி மாணவர்களின் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை பொது மக்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் கொடுப்பதற்குத் தேவையான தொழில்கள் துவங்குவது குறித்து எடுத்துக் கூறப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்களுக்குத் தொழில்நுட்பம் குறித்து நன்றாகத் தெரியும்.
தொழில்களைத் துவங்குவது குறித்தும், அதனை வளர்ச்சி அடைய வைப்பதற்கான தொழில்நுட்பம் குறித்து அவர்களுக்கு எடுத்துக் கூறுகிறோம். அரசின் கொள்கைகள், ஆராய்ச்சியைத் தொழில்நுட்பமாக மாற்றுவது, தொழில் துவங்குவதற்கு முதலீடு செய்பவர்கள் உள்ளனர்.
சென்னை ஐஐடி, கல்லூரிகளில் அதிகளவில் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அடிப்படையான ஆராய்ச்சியைச் செய்யும் போது அறிவு கிடைக்கும். ஆராய்ச்சியிலிருந்து மக்களுக்குத் தொழில்நுட்பமாகப் பயன்படுத்துவது குறித்தும் விவாதிக்கிறோம்.
ஆராய்ச்சி செய்யப்படும் பொருட்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதில் உள்ள தடங்களை நீக்குவதற்கும் ஆலோசனை செய்து வருகிறோம். சென்னை ஐஐடியில் ஆண்டிற்கு 60 தொழில் நிறுவனங்கள் உருவாக்கப்படுகிறது. அதனை ஆண்டிற்கு 100 தொழில் நிறுவனங்கள் உருவாக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:தொப்பூரில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து...3 பேர் உயிரிழப்பு! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!