தென்காசி:தமிழகம் முழுவதும் ஸ்கேட்டிங்கில் ஆர்வமுள்ள மாவட்டங்களில் முதன்மையானதாக தென்காசி மாவட்டம் விளங்குகிறது. அப்பகுதியில் ஸ்கேட்டிங் விளையாடுவதற்கு ஏற்ற நல்ல மைதானம் இல்லாத போதிலும் இப்பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் ஸ்கேட்டிங்கில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர்.
அந்த வகையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அ.கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த கேசவன் - சரண்யா தம்பதியின் மகள் ரேஷ்மிகா(5). இவர், சங்கரன்கோவில் தனியார் ஸ்கேட்டிங் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்நிலையில், இவர் நேற்று(வெள்ளிக்கிழமை) சங்கரன்கோவில் வாசலில் இருந்து கிளம்பி தேவர் குளம் வரை 30 கிலோமீட்டர் தொடர் ஸ்கேட்டிங் சாதனை படைத்து, யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புக்கில் இடம்பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவியின் சாதனை முயற்சி ஓட்டத்தை சங்கரன்கோவில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுதிர் மற்றும் அய்யாதுரை பாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சுமார் ஒரு மணி நேரம் 55 விநாடிகளில் 30 கிலோமீட்டர் தூரத்தை தொடர்ச்சியாக ஓடி 5 வயது சிறுமி ரேஷ்மிகா சாதனை படைத்தார். இவரது சாதனையை யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற புத்தகத்தில் இடம் பிடிப்பதற்காக, புதிய சாதனை முயற்சியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.