சிவகங்கை: சிவகங்கை அருகே 'ச' என்ற தமிழ் எழுத்தும், அமர்ந்த நிலையில் மனித உருவமும், கீழ்ப்பகுதியில் பத்து புள்ளிகளுடன் கொண்ட சுமார் 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட செம்பாலான வேணாடு சேரர் ஆட்சிக்கால நாணயம் (காசுகள்) கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த செப்பு நாணயம் ஆய்வாளர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதே போன்ற நாணயம் மானாமதுரை பகுதியிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா கூறியதாவது, “ சிவகங்கையில் மன்னர் மேல்நிலைப்பள்ளிக்கும், செட்டி ஊரணி கரைக்கும் இடைப்பட்ட பகுதியில் தரை மேற்பரப்பில் இந்தக் காசு கண்டெடுக்கப்பட்டது. சங்க காலம் தொடங்கி 16ஆம் நூற்றாண்டு வரை இன்றைய தமிழக பகுதிகளில் சேரர் ஆட்சி நடைபெற்றுள்ளது. கருவூர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கரூரை தலைநகராகக் கொண்டு சேரர்கள் ஆண்டு வந்துள்ளனர்.
12 ஆம் நூற்றாண்டு முதல் 16ஆம் நூற்றாண்டு வரை கன்னியாகுமரியையும் சேர்த்து வேணாடு அமைந்துள்ளது. வேணாட்டை ஆட்சி செய்தவர்கள் பல்வேறுபட்ட நாணயங்களை வெளியிட்டுள்ளனர். வீர கேரளன், கோதை ரவி, உதயமார்த்தாண்டன் போன்ற அரசர்கள் நாகரி எழுத்துப் பொறித்த காசுகளை வெளியிட்டுள்ளனர். பூதல வீரராமன், பூதல சேரகுலராமன், இராமாராசா போன்ற தமிழ் எழுத்துப் பொறிப்புகள் உள்ள காசுகளும் கிடைத்துள்ளன.
ஓரெழுத்து காசுகள்: 'ச' என்ற ஓரெழுத்து மட்டுமே பொறிக்கப்பட்ட காசுகளும், மா, செ என்ற ஓரெழுத்துகள் மட்டும் பொறிக்கப்பட்ட காசுகளும் இவர்களால் வெளியிடப்பட்டுள்ளன.
சிவகங்கையில் கிடைத்த வேணாட்டு சேரர் காசு:
சிவகங்கையில் கிடைக்கப்பெற்ற காசின் இரண்டு பக்கங்களிலும் மனித உருவம் காணப்படுகிறது. ஒரு பக்கம் நின்ற நிலையில் அவ்வுருவம் காணப்படுகிறது. அதற்கு அருகில் மங்கலச் சின்னமான குத்துவிளக்கும், வலது கை பக்கத்தில் ஆறு புள்ளிகளும், இடதுகை பக்கத்தில் சில புள்ளிகளும் அந்த நாணயத்தில் காணப்படுகின்றன.