ராமநாதபுரம்:பரமக்குடி அருகே குளத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் பர்ஜித், தன்னுடைய வீட்டின் அருகே எழுத்து பொறிக்கப்பட்ட கல் காணப்படுவதாக கூறிய தகவலை அடுத்து, அப்பள்ளியின் ஆசிரியர்கள் சி.பால்துரை, சி.ராமமூர்த்தி ஆகியோர் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்திற்கு தகவல் அளித்தனர்.
அதனடிப்படையில், நிறுவனர் வே.ராஜகுரு, தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவர்கள் கவின்ராஜ்பாண்டியன், பிரியதர்ஷன், அபிஜன், ரித்திக் ஆகியோர் நேரில் சென்று அவ்விடத்தையும், கல்வெட்டையும் சுத்தம் செய்து, பின்னர் கல்வெட்டையும் எடுத்துப் படித்தனர்.
அப்போது பேசிய ராஜகுரு, "கல்வெட்டில் சகாத்தம் 1560-ன் மேல்ச் செல்லா நின்ற வெகுதானிய வருஷம் ஆவணி 5ல் செவ்விருக்கை நாட்டில் குளத்தூர் குமிள மடை உடைய நாயன் தழவாயான் சேதுபதி காத்த தேவர் புண்ணியம்" என 12 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. இதன் தற்போதைய ஆண்டு கி.பி.1638. இது இரண்டாம் சடைக்கத் தேவர் என்ற தளவாயான் சேதுபதி காலத்தைச் சேர்ந்ததாகும்.
இதையும் படிங்க: "ராஜராஜ சோழன் சமாதி; உடையாளூரில் அகழ்வராய்ச்சி" திமுக எம்எல்ஏ, இயக்குநர் மோகன் கோரிக்கை!
கண்மாயின் உட்புறம் உயர்ந்து நிற்கும் இரு தூண்களையும், அதன் கீழே கல்பெட்டி போன்ற ஒரு அமைப்பையும் குமிழி மடை என்பர். கல்பெட்டியின் மேற்பகுதியிலும், தரைமட்டத்திலும், இருக்கும் நீரோடி, சேறோடி துளைகள் மூலம் கண்மாயின் அதிகப்படியான நீரும், சேறும் வெளியேற்றப்பட்டு, பாசனக்கால்வாயில் சேரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். பாசனத்திற்கு நீர் திறக்கும்போது துளையை மூடியிருக்கும் கல்லை நீக்குவர். குளத்தூர் கண்மாயில் இத்தகைய குமிழி மடையை மன்னர் அமைத்துத் தந்துள்ளதாக இந்த கல்வெட்டு தெரிவிக்கிறது.
பரமக்குடியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு (ETV Bharat Tamil Nadu) இவர் ஆட்சிக்கு வந்ததும் ராமேஸ்வரம் கோயிலுக்கு, பட்ட காணிக்கையாக இரு ஊர்களை தானமாகக் கொடுத்த செப்பேடு மூலம் இவர் கி.பி.1632 முதல் ஆட்சியில் இருந்ததாக கொள்ளலாம். இவ்வூர் அருகிலுள்ள முதலூரில் இம்மன்னர் கி.பி.1637ல் குளமும், கலிங்கு மடையும் அமைத்துக் கொடுத்த கல்வெட்டு உள்ளது. இவர் காலத்தைச் சேர்ந்ததாக இரு கல்வெட்டுகள், 3 செப்பேடுகள் மட்டுமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இப்புதிய கல்வெட்டு இம்மன்னரது வரலாற்றுக்கு வலு சேர்க்கும் ஆதாரமாக விளங்குகிறது.
இவர் நீர்ப்பாசனத்தில் மிகுந்த கவனம் செலுத்தியதை அறியமுடிகிறது. இவ்வூர் கண்மாய் கலிங்குப் (தெத்து) பகுதியில், பல கற்கள் கிடந்ததாகவும், அதில் கல்வெட்டு உள்ள இக்கல்லை 7 ஆண்டுகளுக்கு முன் எடுத்து வந்து துணி துவைக்கப் பயன்படுத்தியதாகவும் அவ்வூரைச் சேர்ந்த சசிக்குமார் தெரிவித்தார். கண்மாயில் சேதுபதி மன்னர் அமைத்த குமிழி மடை அகற்றப்பட்டு அந்த இடத்தில் தற்போது கலிங்கு மடை கட்டப்பட்டிருக்கலாம். அப்பகுதியில் சீமைக்கருவை மரங்களுக்குள் மடை அமைத்த கற்கள் சிதறிக் கிடக்கின்றன" எனத் தெரிவித்தார்.
மேலும், இந்த கல்வெட்டை தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும் என ஆய்வாளர்களும் தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தற்போது, 386 ஆண்டுகளுக்கு முற்பட்ட சேதுபதி மன்னரின் பழமையான கல்வெட்டு, துணி துவைப்பதற்காகப் பயன்படுத்தி வந்த கல்லில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்