பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் செய்தியாளர்கள் சந்திப்பு சேலம்:தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் சேலம் தனியார் பொறியியல் கல்லூரி கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. அச்சங்கத்தின் மாநில தலைவர் மாயவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அச்சங்கத்தின் மாநில தலைவர் மாயவன் பேசுகையில், “அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பறிக்கப்பட்ட உரிமைகளைத் தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்ப வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தும் விதமாக மார்ச் 5ஆம் தேதி முதல் கண்டன ஆர்ப்பாட்டம், கண்டன பொதுக்கூட்டம் மற்றும் உண்ணாவிரதம் என மூன்று கட்ட போராட்டங்களை நடத்த உள்ளோம்.
மேலும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதிய திட்டத்தைத் தாமதம் இன்றி அமல்படுத்த வேண்டும். பதவி உயர்வுக்கு TET தேர்வு உரையை ரத்து செய்ய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு எந்த வித கோரிக்கைகளையும் நிறைவேற்ற வில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் உரிமைகளைப் பறித்துள்ளது.
பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டங்களுக்கும் அரசு செவி சாய்க்காவிட்டால் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தையும் நடத்துவோம்' என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நடக்கவிருக்கும் 3 கட்ட போராட்டங்களில் குறைந்தபட்சம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொள்வார்கள். இதனைத் தவிர்க்க வேண்டும் என்றால் நடந்து கொண்டு இருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110 பயன்படுத்தி எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்.
ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகளுக்கு அப்பாற்பட்ட பல்வேறு கோரிக்கைகள் உள்ளன, அதனையும் நிறைவேற்றிட வேண்டும். அதற்கு முன்னால் கல்வித்துறை எங்களை அழைத்துப் பேசினால் எங்களுக்குப் போராட வேண்டிய தேவையில்லை.
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. மேலும் ஆசிரியர்களைக் கற்பித்தல் பணியைத் தவிர மற்ற அனைத்து பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடிய மோசமான நிலைமை தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. இது கல்வியின் வளர்ச்சிக்கு உதவாது எனவே இந்த பாதையிலிருந்து கல்வித்துறை தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஏற்காட்டில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து: 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்; போக்குவரத்து பாதிப்பு!