கோயம்புத்தூர்: கோவை ராம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஜார்ஜ் (75). இவருக்கு கடந்த மாதம் 8ஆம் தேதி வாட்ஸ் அப் கால் (WhatsApp Call) ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர் தான், மும்பை பாந்த்ரா காவல் நிலையத்தில் இருந்து பேசுவதாகவும், ராஜ் குந்தரா என்ற மோசடி பேர்வழியை கைது செய்துள்ளோம், அவன் உங்களது ஆதார் கார்டை பயன்படுத்தி மும்பையில் வங்கி ஒன்றில் கணக்கு தொடங்கியும், சிம்கார்டு வாங்கியும் பல மோசடி செய்திருக்கிறார். அந்த வழக்கில் உங்களையும் சேர்த்துள்ளோம், அதனால் விரைவில் உங்களைக் கைது செய்யப்போகிறோம் என்று கூறியதாக அறியப்படுகிறது.
இதற்கு மறுநாள், பாந்த்ரா காவல் நிலைய உயரதிகாரி என்று பேசிய மற்றொரு நபர், ஜார்ஜ் மீது உச்ச நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் வாங்கி கைது செய்யப்போகிறோம், அதிலிருந்து தப்பிக்க, அபராதமாக ஜார்ஜின் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை உடனே அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு பயந்துபோன ஜார்ஜ், தனது வங்கிக் கணக்கில் வைத்திருந்த வைப்பு நிதி 67 லட்சத்தை அந்த நபர் கூறிய மத்திய பிரதேச வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். அதன்பிறகும், அந்த நபர் மேலும் பணம் செலுத்தக் கூறி ஜார்ஜை மிரட்டியதால், மற்றொரு வங்கிக் கணக்கில் இருந்த 10 லட்சம் ரூபாயை அனுப்ப, வங்கி கிளைக்கு ஜார்ஜ் நேரடியாகச் சென்றுள்ளார்.
அப்போது வங்கி மேலாளர், 10 லட்சம் ரூபாயை எதற்காக எடுக்கிறீர்கள் என்று கேட்டபோது, அவரிடம் நடந்ததை ஜார்ஜ் கூறியுள்ளார். இதைக்கேட்ட வங்கி மேலாளர், இது மோசடி வேலை, இது குறித்து சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் செய்யும் படி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி ஜார்ஜ், கோவை சைபர் க்ரைம் போலீசாரிடம் கடந்த மாதம் 12ஆம் தேதி புகார் செய்துள்ளார்.