சென்னை: சென்னை போரூரில் குன்றத்தூர் சாலை எம்.எஸ்.நகர் அருகே போரூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக பைக்கில் வந்த இரண்டு பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பேசி உள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்த போது அதில் ரூ. 28 லட்சம் மதிப்பிலான பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து இருவரையும் போரூர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் பிடிபட்டவர்கள் அனகாபுத்தூர் நேதாஜி தெருவை சேர்ந்த ரஞ்சித் குமார் (34), பாலாஜி நகரை சேர்ந்த அங்குராஜ் (37) என்பது தெரிய வந்தது. இருவரும் ரியல் எஸ்டேட், கவரிங் நகை விற்பனை, பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை, பழைய பொருட்களை வாங்கி விற்பது போன்ற வேலைகளை செய்து வந்துள்ளனர்.
இவர்களுக்கு நன்கு அறிமுகமான இஸ்மாயில் என்ற நபர், தனது உறவினரான சீர்காழியைச் சேர்ந்த சதாம் என்பவரிடம் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் இருப்பதாகவும், பண மதிப்பிழப்பின் போது அவர் வெளிநாட்டில் இருந்ததால் அவரிடம் இருந்த பணத்தை மாற்ற இயலாமல் போனதாகவும் அதனை மாற்றி தரும்படியும் கேட்டுள்ளார்.