கோயம்புத்தூர்: கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், 163.3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய உயர் சிறப்பு மருத்துவ கட்டிடத்தையும், 2.45 கோடி மதிப்பீட்டில் நீராவி சலவை வசதி கட்டிடம் கட்டுவதற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சியில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டியும், திறந்தும் வைத்தார்.
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நிகழ்ச்சி நேரலை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் புதிய கட்டிடங்களை பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் புற்றுநோயை துல்லியமாக கண்டறிவதற்கு இரண்டு இடங்களில் மட்டுமே பெட் சிடி ஸ்கேன் இருந்தது. தற்போது கோவை, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், காஞ்சிபுரம் போன்ற 5 மாவட்டங்களில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைகளிலும் இந்த பெட் சிடி ஸ்கேன்கள் அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இன்று கோவை அரசு மருத்துவமனையில் 26 கட்டண படுக்கையறைகள், 100 தீவிர சிகிச்சைக்கான படுக்கைகள், 300 படுக்கை வசதிகள், 10 அறுவை சிகிச்சை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள், இந்த மருத்துவமனைக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.