தூத்துக்குடி:தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்வது, தொடர்கதையாக இருந்து வருகிறது. அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து இருந்து விசைப்படகில் சென்று நெடுந்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியது.
இதில் படகு சேதமடைந்ததால், மலைச்சாமி (59) என்ற மீனவர் கடலில் மூழ்கி இறந்தார். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து இருப்பது, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
22 மீனவர்கள் கைது:தூத்துக்குடி அருகே உள்ளது தருவைகுளம் என்ற மீனவ கிராமம். இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தருவைகுளம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி மகாராஜா (45), என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 21ஆம் தேதி ஒர் விசைப்படகில் 12 மீனவர்களும், 23ஆம் தேதி மற்றொரு படகில் 10 மீனவர்களும் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.