சென்னை:அமெரிக்காவில் மிசிசிப்பி பகுதியில் வசித்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் கடந்த 2022 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தாய், தந்தை இழந்த குழந்தையை உறவினர்கள் மீட்பதற்குள், அமெரிக்க அரசு குழந்தையை பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தம்பதிக்கு அதிகாரபூர்வமாக தத்துகொடுத்துள்ளது. இதனால், தனது அக்காவின் குழந்தையை மீட்க குழந்தையின் சித்தி அமெரிக்க நீதிமன்ற உதவியை நாடியுள்ளார்.
ஆனால், குழந்தையை தத்தெடுத்த தம்பதியினரும் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையில் முறையீடு செய்வது குறித்து தெரியாததால், அவர்களுக்கு தமிழக அரசின் அயலக தமிழர் நலவாரியம், இந்திய தூதரகம், தமிழ்ச் சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தேவையான உதவிகளை செய்துள்ளது.
இந்த விவகாரம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று உதவி கேட்டுள்ளனர். இதையடுத்து, முதலமைச்சரின் உத்தரவின்படி, தமிழக அரசின் அயலக தமிழர் நலவாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி அமெரிக்கா சென்று அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள், தமிழ்ச் சங்கங்கள், சட்ட நிபுணர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் ஆலோசனை நடத்தி அமெரிக்க நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களை சமர்பித்துள்ளார்.
உரிய ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்பித்ததின் அடிப்படையில், குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இரண்டு ஆண்டு நீண்ட சட்டப் போராட்டத்துக்கு பிறகு, அமெரிக்க குடியுரிமை பெற்ற 2 வயது குழந்தை, சித்தியுடன் நேற்று தமிழகம் வந்தடைந்தான். சென்னை விமான நிலையத்திற்கு வந்த குழந்தையை அவனது உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.